ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
குறள் வார விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பின்வரும் நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன

திருக்குறளின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றும் வகையில், வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழகம் முழுவதும் 'குறள் வார விழா' மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதல்வரின் அறிவிப்பு
கடந்த 31.12.2024 அன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட வெள்ளிவிழா நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் "ஒவ்வோர் ஆண்டும் குறள் வாரம் கொண்டாடப்படும்" என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக, வரும் ஜனவரி மாதம் பல்வேறு கலை மற்றும் இலக்கியப் போட்டிகளுடன் இவ்விழா அரங்கேற உள்ளது.
விழாவின் முக்கிய சிறப்பம்சங்கள்:
குறள் வார விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பின்வரும் நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன:
கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள்: சேலம், திருச்சிராப்பள்ளி, தேனி மற்றும் கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் திருக்குறள் சார்ந்த நாட்டிய நாடகங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மக்களுக்கான போட்டிகள்: தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் பொதுமக்களுக்காக 'குறள் ஓவியப் போட்டி' மற்றும் 'குறள் ஒப்பித்தல் போட்டிகள்' நடத்தப்படும்.
மாணவர்களுக்கான கலைத் திருவிழா: கோயம்புத்தூர், வேலூர், தஞ்சாவூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில், மாவட்ட அளவிலான மாணாக்கர்கள் பங்கேற்கும் குறள் சார்ந்த கலை நிகழ்ச்சிகள், ஓவியம் மற்றும் படத்தொகுப்புப் போட்டிகள் நடைபெறும்.
பட்டிமன்றங்கள்: மதுரை, ஈரோடு, நாமக்கல் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் திருக்குறள் சார்ந்த பட்டிமன்றங்கள் நடைபெறவுள்ளன.
சென்னை மெரினாவில் 'தமிழோசை':
சென்னையில் 10.01.2026 (சனிக்கிழமை) அன்று மெரினா கடற்கரையில், திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் ஒருங்கிணைப்பில் 'தமிழோசை' என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி பெருநகர சென்னை மாநகராட்சியால் நடத்தப்பட உள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான போட்டிகள்:
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காகத் திருப்பூர் மாவட்டத்தில் 21.01.2026 அன்று 'குறளாசிரியர் மாநாடு' மற்றும் 'குறள் வினாடி-வினா' போட்டிகள் நடைபெறவுள்ளன.
முதல்நிலைத் தேர்வு: திருப்பூர் மாநாட்டிற்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க, வரும் 09.01.2026 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் முதல்நிலைத் தேர்வு நடைபெறும்.
தகுதி: இத்தேர்வில் முதல் 30 இடங்களைப் பிடிக்கும் வெற்றியாளர்கள், திருப்பூரில் நடைபெறும் இறுதிச் சுற்றில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
குறள் வினாடி-வினா போட்டிக்கான பாடத்திட்டங்கள், விதிமுறைகள் மற்றும் கூடுதல் விவரங்களை அரசு வெளியிட்டுள்ள விரைவுத் துலங்கள் குறியீடு (QR Code) வாயிலாகப் போட்டியாளர்கள் அறிந்து கொள்ளலாம்.
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாட்டின்" பெருமையை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் ஒரு பாலமாக இந்த குறள் வார விழா அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















