JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இணைந்து வருகின்றனர்.

முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான ஜேசிடி பிரபாகரன் தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் முன்னிலையில் இணைந்தார். விரைவில் அவருக்கான பதவி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேசிடி பிரபாகரன் ஜெயலலிதா தலைமையிலான 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக பணியாற்றினார். தொடர்ந்து ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார். எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றப்பின் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்கள் அனைவரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். அந்த வகையில் ஜேசிடி பிரபாகரும் நீக்கப்பட்டார்.
எனினும் அவர் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளராக தொடர்ந்தார். இந்நிலையில் அவர் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இது அரசியல் உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் எம்.பி., சத்யபாமா உள்ளிட்டோர் அதிமுகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த தீவிர ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்து அவருக்கு அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.வான வைத்திலிங்கம் மாற்றுக் கட்சிக்கு செல்லவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதிமுகவும் ஓ.பன்னீர்செல்வத்தை சேர்த்துக் கொள்ள மறுப்பதால் அவர் தனித்து விடப்பட்டுள்ளார். அவரின் அரசியல் எதிர்காலம் என்னவாகப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய்க்கு நல்லாட்சி தருவார்
இதனைத் தொடர்ந்து ஊடகத்தினரிடம் பேசிய ஜேசிடி பிரபாகர், “எம்.ஜி.ஆரைப் பார்த்தபோது என்ன மகிழ்ச்சி ஏற்பட்டதோ அதேபோல் இன்று நான் விஜயை சந்தித்தபோது ஏற்பட்டது” என குறிப்பிட்டார். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தில் பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் இருக்க வேண்டும். அது தமிழக மக்களுக்கு ஒரு ஏற்றத்தை தர வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு ஒரு ஏமாற்றத்தை தர வேண்டும் என்ற அளவுக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு பெருகி கொண்டிருக்கிற இளைய தளபதியுடன் நான் இணைவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
எம்ஜிஆர், ஜெயலலிதா என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தனர். ஒரு தூய நல்லாட்சி அமைவதில் நான் எங்கள் தலைவர் விஜய்க்கு உறுதியாக இருப்பேன். அதிமுகவை இணைக்கும் முயற்சியாக நாங்கள் ஒருங்கிணைந்து நின்றோம். ஆனால் அந்த முயற்சி இனி வெற்றி பெறாது என்ற சூழல் உருவாகி விட்டது. அதிமுக தொண்டர்களுக்காக நான் மிகவும் கவலைப்பட்டேன். அவர்களுக்காக தான் இணைப்பு முயற்சி எடுக்கப்பட்டது. எல்லாவற்றிலும் எங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. பொதுவாழ்வில் எம்ஜிஆர், ஜெயலலிதா கொடுத்த நல்லாட்சி போல அமைய வேண்டும் என்பதால் தான் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன்” என அவர் கூறியுள்ளார்.





















