இறப்பிலும் இணைபிரியாத தம்பதி: மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி!
மயிலாடுதுறை அருகே 50 ஆண்டுகளுக்கும் மேலாக மனமொத்து வாழ்ந்த வயோதிக தம்பதியினர் இறப்பிலும் ஒன்றாக இணைந்தனர்.
மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி கிராமத்தில் ஒரே நாளில் வயோதிகத் தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நல்லத்துக்குடி சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 88 வயதான கிருஷ்ணமூர்த்தி. வயது மூப்பின் காரணமாக இவர் நேற்று மதியம் உயிரிழந்தார். கணவர் இறப்பு தாங்கமுடியாமல் நேற்று மதியம் முதல் அவரது மனைவி மருதாம்பாள் (83 வயது) தொடர்ந்து அழுது கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் மருதாம்பாள் நேற்று இரவு கிருஷ்ணமூர்த்தி சடலத்தில் மேல் மயங்கி விழுந்தவர் அப்படியே அங்கேயே உயிரிழந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு திருமண நடைபெற்று 50 ஆண்டுகள் இல்லற வாழ்க்கையின் அடையாளமாக இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்புடனும், அதீத பாசத்துடனும் இருந்து வந்துள்ளனர். திருமண ஆன நாள் முதல் இதுநாள் வரை இருவருக்கும் இடையே பெரிய அளவில் சண்டை சச்சரவுகள் ஏதும் வந்தது கிடையாது என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த அளவுக்கு இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். தன்னுடன் குடும்பம் நடத்தி வந்த தனது கணவர் பிரிந்த துக்கம் தாங்காமல் அவரது மனைவி துக்கம் தாங்காமல் உயிரிழந்துள்ளார். கணவர் மனைவி இருவரின் இறப்பு செய்தி கேட்டு உறவினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வயோதிக தம்பதியினர் இருவரும் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தையும் நெகிழ்ச்சியையும், ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் திருமண ஆன சில நாட்கள் , வாரங்கள், மாதங்களில் சண்டையிட்டு கொண்டு விவாகரத்து கேட்டு நீதிமன்ற வாயில் காத்து கிடக்கும் தம்பதியர்கள் மத்தியில் இதுபோன்று ஆண்டுகள் பல கடந்தும் கணவன் மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலால் ஒருவர் உயிரிழப்பை தாங்காமல் மற்றொருவரும் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்தேறிதான் வருகிறது.