மயிலாடுதுறை மாவட்டத்தில் முழுமையாக செயல்பட தொடங்கிய நீதிமன்றம்
மயிலாடுதுறையில் இன்று மாவட்ட நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் துவங்கப்பட்டு முறையாக செயல்பட துவங்கியுள்ளது.
தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை கடந்த 2020 -ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இருப்பினும், மாவட்டத்திற்கான தலைமை மருத்துவமனை, நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என அனைத்து துறைகளும் முழுமை பெறாமல் நாகப்பட்டினத்திலேயே தொடர்ந்து செயல்படும் சூழல் நிலவி வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நீதித்துறையை பொறுத்த வரையில் தொடர்ந்து மாவட்ட நீதிமன்றம் மற்றும் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் ஆகியவை நாகப்பட்டினத்தில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் கோரிக்கையை ஏற்று, மயிவாடுதுறை நீதித்துறை பிரிக்கட்டட்டு அதற்கான 20,25,000 ரூபாய் செலவில் பொதுப்பணித்துறையால் கட்டிட பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு இந்த திறப்பு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று முதல் மயிலாடுதுறையில் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு காணொளி காட்சி வாயிலாக மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தை துவக்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதியாக இளங்கோவும், முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக மணிமேகலையும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதி அரசர் ஆர்.தாரணி நீதி அரசர் சிவஞானம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மாவட்ட நீதிமன்றம் மற்றும் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சம்பிரதாயமான முறைப்படி வழக்கு விசாரணை துவங்கியது. நீதிமன்ற ஊழியர்கள் சாட்சிகளை பெயர் சொல்லி அழைக்க நீதிபதி தனது இருக்கையில் அமர்ந்து அனைவரையும் பார்த்து வணக்கம் செலுத்தி விசாரணையை துவக்கி மற்றொரு நாளுக்கு ஒத்தி வைத்தார். மேலும் இதில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்