மகப்பேறு மருத்துவர் இல்லாத அரசு தலைமை மருத்துவமனை - சீர்காழியில் கர்ப்பிணி பெண்கள் அவதி
சீர்காழி அரசு தலைமை மருத்துவமனையில் பெண் மருத்துவருத்துவர்களும், மகப்பேறு மருத்துவரும் இல்லாமல் கர்ப்பிணிகளுக்கு செவிலியர்கள் பிரசவம் பார்த்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ளது சீர்காழி அரசு தலைமை மருத்துவமனை. இங்கு சீர்காழி தாலுக்கா முழுவதிலும் உள்ள பொதுமக்களுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்கும் என தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கிராமப்புறங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பல இருந்தாலும் 24 மணி நேரமும் அவசர தேவைக்கு ஓடோடி வரும் பொதுமக்களுக்கு இந்த அரசு தலைமை மருத்துவமனை உயிர் காக்கும் மையமாக திகழ்கிறது. இங்கு நாள்தோறும் 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட உடல்நலம் பாதித்த பொதுமக்கள், வயோதியர்கள், குழந்தைகள் என பலர் உட்புற நோயாளியாகவும், வெளிப்புற நோயாளியாகவும் சிகிச்சை எடுத்து செல்கின்றனர்.
அரசு தலைமை மருத்துவமனை என்பதால் ஒரு முதன்மை மருத்துவ அலுவலர், மற்றும் பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவர், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, கண் சிகிச்சை, மயக்க மருந்து நிபுணர், என பத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த வரிசையில் முக்கியமாக (பிரசவ பிரிவு) எண்ணற்ற கர்ப்பிணி தாய்மார்களின் நம்பிக்கை வாழ்விடமாக திகழ்வது இங்குள்ள பிரசவ பிரிவு தான். முக்கிய பங்கு வகிக்கக்கூடிய கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சை பிரிவில் பணியாற்றிய (ஓ.ஜி) என்று சொல்லக்கூடிய இரண்டு மகப்பேறு மருத்துவர்கள் பணியில் இருந்து வந்தனர். ஆனால் கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் இருவரும் பிரசவகால விடுப்பில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுவரை சுமார் 15 நாட்களுக்கு மேலாக பிரசவ பெண் மருத்துவர்கள் இல்லாமல் பிரசவ வார்டு செயல்பட்டு வருகிறது.
சில பிரசவ வார்டில் பணியாற்றும் பெண் உதவியாளர்கள், அனுபவம் இல்லாத தற்காலிக செவிலியர்கள், பிரசவம் பார்த்த சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறியுள்ளன. ஆனால், இது போன்ற நெருக்கடியான சூழ்நிலையில் மிகவும் அத்தியாவசிய தேவையாக கருதப்படும் மகப்பேறு மருத்துவர் பணியிடம் கடந்த 15 நாட்களுக்கு மேலாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிகள் சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்து விடும் என கூறி, மருத்துவர் இல்லாமல் செவிலியர்கள் மட்டுமே கர்பிணி பெண்களின் உயிரில் அக்கரை இல்லாமல் தாய் சேய் என இரண்டு உயிரில் விளையாடி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் ஏழை கர்பிணிகள் தனியார் மருத்துவமனையை சென்று பல ஆயிரங்களை செலவு செய்ய முடியாத சூழ்நிலையில் சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் என பிரசவத்திற்காக வெகு தொலைவு செல்ல வேண்டியுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஏழை, எளிய கர்ப்பிணி தாய்மார்களின், ஒரே நம்பிக்கை வாழ்விடம், அரசு மருத்துவமனை தான், அந்த வகையில் மிக மிக அத்தியாவசிய தேவையான மகப்பேறு மருத்துவர் பணியிடம் காலியாக இருப்பது பெரும் வேதனைக்குரிய விஷயம் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சூழலை போக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக பெண் மருத்துவர் அதுவும் மகப்பேறு மருத்துவரை நியமிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்