மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் - பொதுமக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
மயிலாடுதுறை நகராட்சி நகர்மன்ற அவசரக்கூட்டத்தில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்த பொதுமக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மயிலாடுதுறையில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டம் 2021 - 2022 -இன்கீழ் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்காக தமிழக அரசால் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 16ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இந்த பணிக்கான ஒப்புதல் வழங்குவதற்காக மயிலாடுதுறை நகராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் அவசரக் கூட்டம் நேற்ற நடைபெற்றது. நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற திமுக, அதிமுக, பாமக ஆகிய அனைத்து கட்சிகளும் புதிய பேருந்து நிலையம் திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்து பேசினர்.
மயிலாடுதுறை மக்களின் 34 ஆண்டு கால கனவை நிறைவேற்றும் வகையில் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர், பேருந்து நிலையம் அமைக்க இடம் வழங்கிய தருமபுரம் ஆதீனம், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நகர்மன்றம் சார்பில் நன்றி தெரிவித்தனர்.
பின்னர், நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கூறுகையில், "புதிய பேருந்து நிலையம் அமைக்க 13.4 ஏக்கர் நிலம் தருமபுரம் ஆதீனத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது. புதியபேருந்து நிலையம் பைபாஸ் சாலை வசதியுடன் பயனுள்ள புதியபேருந்து நிலையமாக அமையவுள்ளது. வருகின்ற நவம்பர் மாதத்தில் தமிழக முதல்வர் பேருந்து நிலையத்திற்கான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கவுள்ளார். பழைய பேருந்து நிலையம் நகரப்பேருந்து நிலையமாக தொடர்ந்து இயங்கும்" என்றார்.
அகமதாபாத்திலிருந்து திருச்சி வரை செல்லும் சிறப்பு தொடர்வண்டிக்கு மயிலாடுதுறையில் உற்சாக வரவேற்பு அளித்த வட மாநிலத்தவர்கள். பண்டிகை கால சிறப்பு தொடர்வண்டியை தொடர் சேவையாக இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள வட மாநிலத்தவர்கள் பயன்பெறும் வகையில் அகமதாபாத்தில் இருந்து திருச்சி வரை சிறப்பு தொடர்வண்டி (09419) சேவை தொடங்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு ஒரு மாத காலத்திற்கு இந்த ரயில் சேவை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு திருச்சி வரை செல்லும் சிறப்பு தொடர் வண்டிக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு மயிலாடுதுறை தொடர்வண்டி நிலையத்தில் வட மாநிலத்தவர்கள் ஒன்றிணைந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது தொடர்வண்டிக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து ஓட்டுநர், ரயில் நிலைய மேலாளர், காவல்துறை அதிகாரிகளுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கினர். மேலும், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் வசிக்கும் வடமாநிலத்தவர்களின் நலன் கருதி இந்த வண்டியை, தொடர் சேவையாக இயக்க வேண்டுமென அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.