தொடரும் நீட் மரணத்துக்கு திமுக தலைவர் நிச்சயம் முடிவு கட்டுவார் - எம்எல்ஏ எம்.முருகன்
மயிலாடுதுறையில் நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசைக் கண்டித்தும், தமிழக ஆளுநரையும் கண்டித்து திமுகவினர் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள நீட் தேர்வைத் திணிக்கும் மத்திய பாஜக அரசு, ஆளுநரை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் ஆகஸ்ட் 20-ம் தேதி உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு, நீட் தேர்வுக்கு எதிரான ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் தன்னார்வலர்களும் பொதுமக்களும் தங்களின் கருத்துகளை எடுத்துத்தனர். இந்த போராட்டத்தின் பணிகளை இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணிகளின்மாவட்ட அமைப்பாளர், துணைஅமைப்பாளர்கள் ஒருங்கிணைத்தனர்.
இதேபோல், மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் அறப்போராட்டத்தில் அமைச்சர்கள், துணைப் பொதுச்செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அணிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
CM Stalin on NEET: நீட் தேர்வு விவகாரம்; ஆளுநர் வெறும் தபால்காரர்தான்- முதல்வர் ஸ்டாலின் காட்டம்
அதன் ஒன்றாக மயிலாடுதுறையில் தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவர் கனவை சிதைத்து மாணவர்களின் உயிர் மட்டுமின்றி, அவர்களின் பெற்றோரின் உயிரையும் கொல்லும் உயிர்க்கொல்லியாக நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், தமிழக ஆளுநரை கண்டித்தும் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் மயிலாடுதுறையில் தலைமை தபால் நிலையம் எதிரில் நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருது, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாவட்ட திமுக செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ பேசுகையில், “அரியலூர் அனிதாவில் தொடங்கி குரோம்பேட்டை ஜெகதீஷ்வரன், அவரது தந்தை செல்வசேகரன் வரை தொடரும் நீட் மரணத்துக்கு திமுக தலைவர் நிச்சயம் முடிவு கட்டுவார்” என பேசினார். இதில், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் திமுக மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.