Independence Day 2023 : மயிலாடுதுறையில் சாலையில் நடனம் ஆடி, தேசப்பற்றை ஏற்படுத்திய நடன கலைஞர்கள்
சுதந்திர தினத்தில் தேசப்பற்றை ஏற்படுத்தும் விதமாக மயிலாடுதுறையில் சாலையில் ஆடிய நடன கலைஞர்கள் பொதுமக்களின் பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.
நாடுமுழுவதும் இன்று இந்திய திருநாட்டின் நாட்டின் 76 -வது சுதந்திர தின விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது வருகின்றது. அதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணையம் சாய் விளையாட்டு மைதானத்தில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா முன்னிலையில் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஏற்றுக்கொண்டார்.
பின்னர் காவல்துறை, வருவாய் துறை, சுகாதார துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 412 அரசு அலுவலர்களுக்கு விருதுகள் மற்றும் 912 மாணவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கி 502 பயனாளிகளுக்கு 14.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவர் மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுகந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மயிலாடுதுறை டெம்பஸ்ட் டான்ஸ் அகாடமி மாணவர்கள் வித்தியாசமான வகையில் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். அந்த டான்ஸ் அகாடமியின் பயிற்றுநர் யாசின் தலைமையில் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம், மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் தேசபக்தி பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடி அவர்கள் தங்கள் தேசப்பற்றினை வெளிப்படுத்தினர்.
மயிலாடுதுறை மணிக்கூண்டு பகுதியில் அவர்கள் நடத்திய கலை நிகழ்ச்சியில் தாயின் மணிக்கொடி என்ற ஜெய்ஹிந்த் படத்தில் வரும் திரைப்பாடலுக்கு ஆடிய நடனத்தை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு சென்றனர்.