Independence Day CM Stalin: சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்திற்கான ஓய்வூதியம் ரூ.11,000 ஆக அதிகரிப்பு - முதலமைச்சர் ஸ்டாலினின் சுதந்திர தின உரை
சுதந்திர தினத்தையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின், கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.
நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் உள்ள கோட்டை கொத்தளத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
கொடியேற்றிய ஸ்டாலின்:
காவல்துறயை சேர்ந்தவர்களின் இசைவாத்தியங்கள் முழங்க, 119 அடி உயரமுள்ள கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், பின்பு மரியாதையும் செலுத்தினார். தொடர்ந்து, நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. அப்போது மூவர்ண கொடியின் நிறத்திலான பலூன்கள் அங்கு பறக்கவிடப்பட்டன. இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின் “ சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் வாய்ப்பை அளித்த தமிழக மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.விடுதலை போராட்ட வீரர்களை போற்றி கொண்டாடுவதில் திமுக அரசு யாருக்கும் சலைத்தது அல்ல. உதாரணமாக, மாவீரன் பூலித்தேவனுக்கு நினைவு மண்டபம், பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கோட்டை, மாவீரன் சுந்தரலிகம் வாரிசுகளுக்கு வீடு என சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவாகவும், அவரது குடும்பத்தினருக்கும் செய்துள்ள பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டார்.
ரத்த உணர்வாக கொண்ட தமிழர்கள்..
மொழிப்பற்று, இனப்பற்றுடன் நாட்டுப்பற்றையும் ரத்த உணர்வாக கொண்டவர்கள் நாம். 1962ம் ஆண்டு சீன நாட்டால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் நேர்ந்தபோது, அண்ணா அப்போதைய பிரதமர் நேருவிற்கு உறுதுணையாக இருந்தார். 1971ம் ஆண்டு இந்தியாவை பாகிஸ்தான் அச்சுறுத்திய போது மாநில அரசுகள் சேர்ந்து மத்திய அரசுக்கு 25 கோடி நிதியை திரட்டி தந்தன. அதில் தமிழக அரசு சார்பில் 6 கோடி ரூபாயை கொடுத்தவர் கருணாநிதி. 1999ம் ஆண்டு கார்கில் போரின் போது மூன்று தவணையாக ரூ.50 கோடியை வழங்கினார் கருணாநிதி. இன்றைய திராவிட மாடல் அரசும் நம் நாட்டு தியாகிகளை மதித்து போற்றி வருகிறது. தொடர்ந்து, தியாகிகளை நினைவு கூறும் வகையிலான பல்வேறு திட்டங்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக் காட்டினார்.
ஓய்வூதியம் உயர்வு:
அதன் பின்பு, “கடந்த தியாகிகளுக்கான ஓய்வூதியம் 18 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாகவும், அவர்களது குடும்பத்திற்கான ஓய்வூதியம் 9 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்பட்டது. இந்நிலையில், விடுதலை போராட்ட வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 10 ஆயிரத்தில் இருந்து 11 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
உரிமைத்தொகை:
சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை மற்றும் மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களை கொண்ட திமுகவின் ஆட்சி தான் தற்போது நடைபெற்று வருகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகமும் ஒரு துறையில் மட்டுமின்றி, பல்துறைகளிலும் வளர்ச்சியை கண்டுள்ளது. அதனடிப்படையில் குடும்ப பாரத்தை சுமக்கும் பெண்களின் உரிமையை உணர்த்தும் விதமாக, கலைஞர் மகளிர் திட்டம் அடுத்த மாதம் 15ம் நாள் தொடங்க உள்ளது. அரசுப்பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேர்ந்த மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் மூலம், கடந்த நிதியாண்டில் மட்டும் 2 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். நடப்பாண்டில் 2.11 லட்சம் மாணவிகளுக்கான நிதியுதவியை வழங்க ரூபாய் 351 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக அரசு கோடிக்கணக்கான பெண்களுக்கு பொருளாதார விடியலை கொடுத்துள்ள அடையாளம் தான், பேருந்துகளில் மகளிர் இலவச பயண திட்டம். இதற்கு விடியல் பயணம் என பெயர் சூட்டப்படுகிறது” என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.