செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
Chembarambakkam Lake: "சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி, முழு கொள்ளளவை எட்டியது"

"செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், அதிகாரிகள் சோதனை முயற்சியாக நீரை முழுமையாக தக்க வைத்துள்ளனர்"
செம்பரம்பாக்கம் ஏரி - Chembarambakkam Lake
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். இன்றைய (03.12.2025) நிலவரப்படி நீர் இருப்பு 24 அடியாகவும், கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடியாகவும் (100%) உள்ளது. இதன் மூலம் செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. எப்போதும் 23 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படுவது வழக்கம். கடந்த 2015 ஆம் ஆண்டு அதிகபட்சமாக, 23.45 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டது. இந்த முறை வரலாற்று சாதனையாக 22 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்ட உள்ளது.
காரணம் என்ன?
ஏரியின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஏரிக்கரைகள் மற்றும் மதகுகளின் பலத்தை முழுமையாகக் கண்டறியும் நோக்கில், ஏரியின் முழு கொள்ளளவான 24 அடி நீரைத் தேக்கி வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஏரியில் உள்ள ஷட்டர்கள் (மதகுகள்) அனைத்திற்கும் தற்போது சென்சார் மற்றும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நவீனமயமாக்கலால், ஏரியின் நீர்மட்டத்தை சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தே துல்லியமாகக் கண்காணிப்பதுடன், அங்கிருந்தே உபரி நீரைத் தேவைக்கேற்பத் திறந்துவிடும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதிகள் மூலம், ஏரியின் நீர் மேலாண்மையைத் திறம்படச் செயல்படுத்த முடியும் என்றும், பாதுகாப்பு குறித்த எந்த அச்சமும் இல்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். முழு கொள்ளளவு நீரைத் தேக்கி வைத்து சோதனை நடத்த இந்தத் தொழில்நுட்ப வசதிகளும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் செம்பரம்பாக்கம் ஏரி முக்கியப் பங்கு வகிப்பதால், அதன் முழு கொள்ளளவைச் சோதனை செய்வது நீர்வள மேலாண்மையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.





















