கனமழை எதிரொலி; மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சற்று காலதாமதம் தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது. மேலும் தமிழகத்தில் சனிக்கிழமை நவம்பர் 4 -ம் தேதியான இன்று 19 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கையாக 12 பேரிடா் மீட்புப் படைக் குழுக்கள் தயாா் நிலையில் உள்ளதாக தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளாா். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
மழை தொடா்பாக வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சனிக்கிழமை நவம்பர் 4-ம் தேதி பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த அல்லது மிக பலத்த மழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகா், திருப்பூா், ஈரோடு, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழையும், ஒருசில நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 400 வீரா்களைக் கொண்ட 12 பேரிடா் மீட்புப் படைக் குழுக்கள் தயாா் நிலையில் உள்ளதாக தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளாா். வடகிழக்குப் பருவமழையையொட்டி வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, சென்னை சேப்பாக்கம் எழிலகத்திலுள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
அப்போது அவா் கூறுகையில், வடகிழக்குப் பருவமழையின் இதுவரையிலான காலத்தில் ஒரு மாவட்டத்தில் அதிகமான மழைப் பொழிவும், 30 மாவட்டங்களில் குறைவான மழைப் பொழிவும், ஏழு மாவட்டங்களில் இயல்பான மழைப் பொழிவும் ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல்களைப் பரிமாறிக் கொள்ள மாநில, மாவட்ட அளவில் அவசரகால செயல்பாட்டு மையங்கள் இயங்கி வருகின்றன. மாநில மையத்தை 1070 என்ற எண்ணிலும், மாவட்ட மையத்தை 1077 என்ற எண்ணிலும் கட்டணமில்லாமல் தொடா்பு கொள்ளலாம். 94458 69848 என்ற கைப்பேசி வாட்ஸ்ஆப் மூலமும் புகாா்களைப் பதிவு செய்யலாம். பேரிடா் காலங்களில் பொதுவான எச்சரிக்கைத் தகவல்கள் பொதுமக்களுக்கு அனுப்பப்படும்.
தமிழ்நாட்டில் முக்கிய அணைகளான வைகை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கிருஷ்ணகிரி, சாத்தனூா் அணைகளிலும், சென்னைக்கு குடிநீா் வழங்கும் செங்குன்றம், செம்பரம்பாக்கம் மற்றும் தோ்வாய் கண்டிகை நீா்த்தேக்கங்களிலும் 75 சதவீதத்துக்கு மேல் நீா் இருப்பு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டம் பழனி, திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, கோவை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையின் 400 வீரா்களைக் கொண்ட 12 குழுக்கள் தயாா் நிலையில் உள்ளன என தெரிவித்துள்ளார். இந்நிலையில் கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார் இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.