தஞ்சை மாவட்டத்திற்கு படையெடுக்கும் வெளி மாவட்ட அறுவடை இயந்திரங்கள்
தற்போது ஆங்காங்கே சம்பா அறுவடை பணிகள் நடந்து வருகிறது. பல இடங்களில் சம்பா நெற்கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராகி வருகிறது.

தஞ்சாவூர்: சம்பா அறுவடை பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்து தஞ்சை மாவட்டத்திற்கு அறுவடை இயந்திர வாகனங்கள் படையெடுத்து வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் தஞ்சை மாவட்டத்தில் சம்பா அறுவடை களைக்கட்ட தொடங்கி விடும்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடப்பது வழக்கம் மேலும் கரும்பு, வாழை, வெற்றிலை, வெள்ளரிக்காய், உளுந்து, எள், மக்காச்சோளம், பூக்கள் போன்றவையும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குறுவை சாகுபடி 1.98 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நடந்து சாதனை படைத்தது.

இதையடுத்து சம்பா, தாளடி 3.25 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு கூடுதலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் பெய்த தொடர்மழையால் சாகுபடி பரப்பளவு எதிர்பார்த்ததை விட சற்றே குறைந்தது. தற்போது ஆங்காங்கே சம்பா அறுவடை பணிகள் நடந்து வருகிறது. பல இடங்களில் சம்பா நெற்கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராகி வருகிறது.
இதில் தற்போது அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது தஞ்சை மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் வரை அறுவடை பணிகள் நடைபெற்றுள்ளன.
இன்னும் அறுவடை பணிகள் இதர பகுதிகளிலும் தீவிரம் அடையும் போது மகசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அறுவடை பணிகள் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் அறுவடை இயந்திரங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து தஞ்சைக்கு கனரக வாகனங்களில் எடுத்து வரப்படுகிறது. அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், சேலம், நாமக்கல், சின்னசேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப அறுவடை இயந்திரங்கள் தஞ்சை மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




















