மறைந்த நண்பனுக்கு மயானத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நண்பர்கள்!
மயிலாடுதுறையில் நண்பன் புதைக்கப்பட்ட இடத்தில் அவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்பம் துன்பம் எது வந்தாலும் பங்கு கொள்ள நண்பன் உண்டு என்ற வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக நாள் தோறும் நாம் பல சம்பவங்களை பார்த்தும், கேள்விப்பட்டும் இருந்திருப்போம். இன்றைய நவீன உலகில், பேஸ்புக்கில் 5 ஆயிரம் பிரண்ட்ஸ், ட்விட்டரில் லட்சம் பாலேயர்கள், பேஸ்புக்கில் 10 லட்சம் பேர் பின்பற்றுபர்கள் இருந்தாலும், பிரச்சனை என்றால் உடன் வந்து நிற்பதற்கு பலருக்கும் நல்ல நண்பர்கள் இருப்பது இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. இதற்கு காரணம் நட்புக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்காமல், வேலை வேலை என்று வேலையின் பின்னால் ஓடுவது தான்.
நட்பு:
இதனால் வேலையில் வேண்டுமென்றால் வென்றுவிடும் ஆனால் அவர்கள், ஒருகட்டத்தில் நடுத்தர வயதை எட்டிய பிறகு தான் தோன்றும், நம்மை சுற்றியுள்ள வட்டம் மிகச்சிறியது என்று. நமக்கான நண்பர்கள் மிகச்சிறிய அளவில் கூட இருக்க மாட்டார்கள். நம்முடன் பள்ளி , கல்லூரியில், வேலையில், நிறுவனங்களில் நட்பு பாராட்டிய ஒவ்வொருவரையும் கடந்து வந்திருப்போம். ஆனால் யாருடனும் நட்பு நெருங்கிய நட்பாக நீண்டிருக்காது. நடுத்தர வயதை கடந்த பின் புதிதாக யாருடனும் நட்பு பாராட்ட முடியாமல், மிகக்குறுகிய வட்டத்தில் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்போம். அப்போது தான் நட்பு என்ற விஷயத்தை எந்த அளவிற்கு தூரமாகிவிட்டது என்பது நமக்கு புரியும்.
மயானத்தில் பிறந்தநாள்:
இந்நிலையில் தான் நட்பின் உதாரணம் போன்ற நிகழ்வு ஒன்று மயிலாடுதுறையில் நடந்தேறி உள்ளது. மயிலாடுதுறையில் நண்பன் புதைக்கப்பட்ட இடத்தில் அவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன். இவருடைய மகன் 38 வயதான மணிகண்டன். இவர் கடந்த நவம்பர் மாதம் 28 -ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்த மணிகண்டனின் 39 -வது பிறந்தநாளை விழாவாக கொண்டாட அவருடைய நண்பர்கள் முடிவு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து.
நேற்று முன்தினம் இரவு அவரை அடக்கம் செய்த மயானத்திற்கு சென்ற அவரது நண்பர்கள் மணிகண்டன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சக நண்பர்கள் சேர்ந்தது கண்ணீர் மல்க அவரது திருவுருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து, மலர்தூவி, கேக் வெட்டி புகைப்படத்திற்கு ஊட்டிவிட்டு தங்கள் நட்பை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டாடினர். இதனை அடுத்து உயிரிழந்த நண்பன் மணிகண்டனுக்கு மிகவும் பிடித்த இனிப்பு வகைகள் வைத்து, படையலிட்டும், பிடித்த விளையாட்டான செஸ் (சதுரங்கம்) விளையாடினர்.
சிறு வயதிலிருந்தே ஒன்றாகச் சுற்றித்திரிந்த நண்பன் இறந்த துயரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கண்ணீர் மல்க நட்புக்காக படத்தில் வரும் மீசைக்கார நண்பா பாடலை பாடியும் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட சம்பவம் மயிலாடுதுறை மட்டும் இன்றி இதனை அறிந்த அனைவரையும் நெகிழ்ச்சியை செய்துள்ளது.