Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இவர்கள் இருவரும் ஆர்எம்எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், முகேஷ் ஐசியுவில் உள்ளார்.
நாடாளுமன்றம் முன்பு எம்.பி.க்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், இரு பாஜக எம்.பி.க்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் தனது முழங்கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், எதிர்க்கட்சியினர் அம்பேத்கர் பெயரை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து அமித் ஷா கருத்து தெரிவித்திருந்தார். அது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், அம்பேத்கரை அமித் ஷா அவமதித்ததாக எதிர்க் கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
காங்கிரஸ், பாஜகவினர் போராட்டம்
தொடர்ந்து டெல்லியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்து மகர் திவார் வரை பேரணியாக வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு, அவையில் பங்கேற்க உள்ளே செல்ல முயன்றனர்.
அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சி அம்பேத்கரைத் தொடர்ந்து அவமதித்து வருவதாக கண்டனம் தெரிவித்து பா.ஜ.க. எம்.பி.க்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருவரும் ஆர்எம்எல் மருத்துவமனையில் அனுமதி
இரு கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சாரங்கி கீழே விழுந்ததில், தலையில் இருந்து ரத்தம் வந்து காயம் ஏற்பட்டது. அதேபோல முகேஷ் ராஜ்புத் என்னும் எம்.பி.யும் காயமடைந்தார். இவர்கள் இருவரும் ஆர்எம்எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், முகேஷ் ஐசியுவில் உள்ளார்.
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் தனது முழங்கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து கார்கே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பாஜக எம்.பி.க்கள் தள்ளிவிட்டதால், ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்து கொண்ட எனது முழங்கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், சமநிலையை இழந்து தரையில் உட்கார வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன்.
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உரிய விசாரணை
இதனால் மிகுந்த சிரமத்துடனும், சக எம்.பி.க்களின் உதவியுடனும் காலை 11 மணிக்கு நான் எனது இல்லத்திற்கு திரும்பினேன். இது குறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க் கட்சி எம்.பி.க்கள் அடுத்தடுத்து காயமடைந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.