Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஒரு பெண் உறுப்பினராக நான் மனமுடைந்து இருக்கிறேன்; எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் இப்படி நடந்துகொள்ளக் கூடாது என்று நினைக்கிறேன்.
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக, பாஜக எம்.பி. பாங்னோன் கொன்யாக் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவைத் தலைவருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், அம்பேத்கர் விவகாரம் புயலைக் கிளப்பியுள்ளது.
தள்ளுமுள்ளுவில் பாஜக, காங்கிரஸ்
தொடர்ந்து டெல்லியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்து மகர் திவார் வரை பேரணியாக வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு, அவையில் பங்கேற்க உள்ளே செல்ல முயன்றனர்.
அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சி அம்பேத்கரைத் தொடர்ந்து அவமதித்து வருவதாக கண்டனம் தெரிவித்து பா.ஜ.க. எம்.பி.க்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சாரங்கி கீழே விழுந்ததில், தலையில் இருந்து ரத்தம் வந்து காயம் ஏற்பட்டது. அதேபோல முகேஷ் ராஜ்புத் என்னும் எம்.பி.யும் காயமடைந்தார். இவர்கள் இருவரும் ஆர்எம்எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், முகேஷ் ஐசியுவில் உள்ளார்.
ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் தனது முழங்கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்து இருந்தார். காங்கிரஸும் பாஜகவும் மாறி மாறிக் குற்றம் சாட்டிக்கொள்ளும் நிலையில், ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராகுல் காந்தியால் தனது சுயமரியாதை பாதிக்கப்பட்டதாக பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து நாகலாந்து பாஜக எம்.பி. பாங்னோன் கொன்யாக், மாநிலங்களவைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நெருக்கமாக வந்து, தவறாக நடந்து கொண்டார்
அந்தக் கடிதத்தில், ’’நான் மகர் தவார் படிகளின் அருகே நின்று கொண்டிருந்தேன். அப்போது திடீரென எதிர்க்கட்சித் தலைவர் தன் கட்சி உறுப்பினர்களுடன் என் முன்பு வந்தார். அப்போது, எனக்கு நெருக்கமாக வந்து, உரத்த குரலுடன் கத்தி என்னிடம் தவறாக நடந்து கொண்டார்.
இதனால் ஒரு பெண் உறுப்பினராக நான் மனமுடைந்து இருக்கிறேன்; எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் இப்படி நடந்துகொள்ளக் கூடாது என்று நினைக்கிறேன்.
சுய மரியாதை ஆழமாகப் புண்பட்டிருக்கிறது
நான் ஒரு பழங்குடி பெண். என்னுடைய சுய மரியாதை ராகுல் காந்தியால் ஆழமாகப் புண்பட்டிருக்கிறது’’ என்று கூறி இருந்தார். இது கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
எனினும் காங்கிரஸ் எம்.பி. ஹிபி இடன் இதை முழுமையாக மறுத்துள்ளார். அவர் மக்களவை சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில் கூறும்போது, ’’சம்பவம் நடந்தபோது நான் அங்குதான் இருந்தேன். ஆனால் அத்தகைய சம்பவம் எதுவும் நடக்கவில்லை. அவர் பெண் என்றும் பழங்குடி எனவும் அனுதாபம் தேட முயற்சிக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்’’ என்று ஹிபி இடன் தெரிவித்துள்ளார்.