மீன்வளத்துறைக்கு எதிராக 29ஆம்தேதி ஈசிஆர் சாலையில் மறியல் - தஞ்சை மல்லிப்பட்டினம் மீனவர்கள் அறிவிப்பு
’’தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தியதாக கூறி மீனவகர்களை மீன்பிடிக்க செல்ல அனுமதி மறுப்பதாக புகார்’’
தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் மல்லிப்பட்டினம் துறைமுக கூட வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் தாஜுதீன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் வடுகநாதன், சேதுபாவாசத்திரம் சங்க தலைவர் டி.செல்வ கிளி, மல்லிப்பட்டினம் வடக்கு விசைப்படகு மீனவர் சங்க தலைவர் ஹபீப் முகமது, செயலாளர் சாகுல்ஹமீது, மல்லிப்பட்டினம் ராமர் கோவில் தெரு மீனவர் சங்க செயலாளர் இளங்கோவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி அன்று விசைப்படகுகள் டீசல் விலை ஏற்றத்தாலும், நாட்டுப் படகுகள் விசைப்படகு செல்லும் நாட்களில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி அனைத்து நாட்களிலும் தொழில் புரிவதால் விசைப்படகுகள், நாட்டு படைகுகள் வலைகளில் சிக்கி விசைப்படகுகளுக்கு மிகப்பெரிய தொழில் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் தொடர் தொழில் நடத்த முடியாததால் படகுகள் வேலை நிறுத்தம் போராட்டம் செய்து வருகிறது, இது சம்பந்தமாக அரசுக்கு பல கோரிக்கைகள், பதிவு தபால் மூலம் முதல்வரின் தனிப்பிரிவு, மீன்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு தபால் மூலமாகவும் நேரிலும் சென்று முறையிட்டு எந்த வித முடிவும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
அதனை முன்னிட்டு மீனவர்கள் குடும்பங்கள் மிகவும் கஷ்டப்பட்டு அவர்களது வாழ்வாதாரம் கேள்வி ஆனதால், வரும் இன்று முதல் தற்காலிகமாக வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று கொண்டு, மீன்பிடி தொழிலுக்கு செல்வது, தடைசெய்யப்பட்ட வலைகளை வைத்திருப்பதாக தொழிலுக்குச் சென்று திரும்பிய விசைப்படகுகள் மீது சோதனை என்ற பெயரில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் படகுகள் மீது உண்மைக்கு புறம்பாக தடை செய்யப்பட்ட வலை வைத்து மீன் பிடித்தாய் என்று, எந்தவித ஆதாரமும் இன்றி சில படகுகள் மீது வழக்கு தொடர்ந்து, அவற்றின் மீது தண்டனை என்ற பெயரில், பல நாட்கள் தொழில் அனுமதி வழங்காமல் பல நாட்கள் தொழில் செய்ய விடாமல் தடுத்தும் அவற்றின் மீது அபராதம் என்ற பெயரில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மீனவர்கள் செலுத்த முடியாத ஒரு தொகையை செலுத்த வேண்டும் என்று மீன் துறை நாகப்பட்டினம் இணை இயக்குனர் அறிவித்துள்ளார்.
இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து இருக்கும் இந்த நேரத்தில் மீனவர்கள், தற்கொலை முடிவுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடன் மறு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுவரை உடன் சம்பந்தப்பட்ட படகுகளை தொழிலுக்கு அனுப்ப வேண்டும். கடந்த காலம் போல் தடைசெய்யப்பட்ட வலைகள், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறும் படகுகள் மற்றும் அரசால் தடைசெய்யப்பட்ட தங்கூஸ் வலை போன்ற தடை செய்யப்பட்ட எந்த வலையாக இருந்தாலும், நாட்டுப்படகாகவோ, விசைப்படகாகவோ இருந்தாலும் பாரபட்சமின்றி கடலுக்குல் ரோந்து சென்று ஆதாரத்துடன் பிடித்து தண்டனை வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு, நிறைவேற்றி தர வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம் கடந்த 15 நாட்களாக இருந்தும், மீனவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமலும் அரசு கண்டுகொள்ளாம் இருப்பதனால், தமிழக அரசையும் , மீன்வளத்துறை இணை இயக்குனரை கண்டித்து வரும் 29ஆம் தேதி முதல், மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை பைபாஸ் சாலையில், தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள், காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து மாநில பொது செயலாளர் தாஜூதீன் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்திலேயே, மல்லிப்பட்டிணம், சேதுபாவசத்திரம், கள்ளிவயல் தோட்டம் ஆகிய மூன்று ஊர்களில்தான் துறைமுகம் உள்ளது. இந்த மூன்று ஊர்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் மீனவர்கள், மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 29 ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் அறிவித்து, கடலுக்கு செல்லாமல் இருக்கும் நிலையில், மீனவர்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகமோ, மீன்வளத்துறை அதிகாரிகளோ, தமிழக அரசோ கண்டு கொள்ளாமல், மீனவர்களை அலட்சியப்படுத்தி வருகின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அலட்சியத்தால், 11 நாட்களில் சுமார் 50 கோடி மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, எங்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி தராவிட்டால், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் திரண்டு, மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை பைபாஸ் சாலையை மறி்த்த, காலவரையற்ற போராட்டம் வரும் 29 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளோம் என்றார்.