Thanjavur : ஆளுநர் மீதான வழக்கு! நீதிமன்றத்தின் கதவை தட்டிய முதல்வர்.. அமைச்சர் சொன்ன முக்கிய பாயிண்ட்
Thanjavur : கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பரிசு பொருட்களை அமைச்சர் வழங்கினார்.

தஞ்சாவூர்: உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவை ஒட்டி தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு கலையரங்கத்தில் 885 பயனாளிகளுக்கு ரூம் 3.77 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை ஆகியவை சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா மற்றும் மகளிர் திருமண நிதி உதவி உடன் 8 கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடந்தது. விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து பேசினார்.
மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், எம்எல்ஏக்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட எஸ்.பி. ராஜாராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் அமைச்சர் கோவை செழியன் பேசியதாவது: மகளிர் உரிமை திட்டம் புதுமைப்பெண் திட்டம் மக்களை தேடி மருத்துவம் உட்பட பல்வேறு திட்டங்களை இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது கல்வி வளர்ச்சியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 100 பயனாளிகளுக்கு ரூ.1.08 கோடி மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 14 பயனாளிகளுக்கு ரூ.14.84 லட்சம் மதிப்பில் மின்கலத்தினால் இயங்கக்கூடிய சக்கர நாற்காலிகள், 25 பயனாளிகளுக்கு ரூ.1.75 லட்சம் மதிப்பில் மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் உட்பட மொத்தம் 665 பயனாளிகளுக்கு ரூ.1.47 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் 144 பட்டதாரி பயனாளிகள் 76 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு தலா ஒரு பவுன் வீதம் 220 பயனாளிகளுக்கு தங்க நாணயமும் 144 பட்டதாரி பயனாளிகளுக்கு தலா ரூ.50,000, பட்டதாரி அல்லாத பயனாளிகள் 76 பேருக்கு ஒரு 25 ஆயிரம் விதமும் என மொத்தம் ரூ.2.30 கோடி மதிப்பில் திருமண நிதி உதவி தொகை வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பரிசு பொருட்களை அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் இலக்கியா மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மாவட்ட சமூக நல அலுவலர் லதா வட்டாட்சியர் அருள்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவின் வளர்ச்சிக்கு எந்த ஒரு பிரச்சனையை முன் வைத்தாலும் அதற்கான மணியோசையை முதலில் ஏற்படுத்துவது தமிழகம் தான். தமிழகம் என்பது அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு திருப்புமுனையான மாநிலம். அரசியல் அமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பிறகு அதில் கை வைக்க முடியாது என்ற நிலை இருந்தபோது பெரியார் தலைமையில் நடைபெற்ற போராட்டம் தான் முதல் சட்ட திருத்தத்திற்கு வழி வகுத்தது.
மாநில கவர்னருக்கு சில வரைமுறை உண்டு. சில அளவுகள் உண்டு. சில நெறிமுறைகள் உண்டு. அதை மீறுகிற போது தான் நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது. வழக்குக்கான விவரங்களை கேட்டிருக்கிறார்கள் தமிழகத்தில் உள்ள ஆளுநருக்கு கொடுக்கின்ற நெறிமுறையோ வரன்முறையோ மற்ற மாநிலங்களுக்கு பொருந்தும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.





















