திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு! விவசாயிகளின் கண்ணீர் கதறல்! அதிமுக மீண்டும் வருமா?
தி.மு.க ஆட்சியில் முக்கியமான இந்த காவேரி- கோதாவரி திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர் . இதேபோல் நடந்தாய் வாழி காவிரி திட்டத்தையும் கிடப்பில் போட்டு விட்டனர்.

தஞ்சாவூா்: தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. தினமும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் அரங்கேறி வருகிறது. தி.மு.க அரசு காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சிமிக்க பிரசார பயணத்தை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் தஞ்சையில் மக்கள் மத்தியில் பேசினார் . பின்னர் திருவையாறில் மக்கள் மத்தியில் பேசினார். நேற்று மதியம் அவர் தஞ்சையில் விவசாயிகள், வியாபாரிகள், பல்வேறு துறையை சேர்ந்தவர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினர். முன்னதாக மாநகர செயலாளர் சரவணன் வரவேற்று பேசினார்.
இதையடுத்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் திகழ்கிறது. விவசாயிகளுக்கு நிறைய பிரச்சனை இருக்கிறது. நானும் ஒரு விவசாயி தான் என்ற முறையில் அதனை நான் நன்கு அறிவேன். உற்பத்தி அதிகமாக இருக்கும் போது அதற்கு உரிய விலை கிடைக்காது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் . நெல், கரும்புக்கு அரசு விலை நிர்ணயம் செய்வது போல் மற்ற பயிர்களுக்கும் நிர்ணயம் செய்ய வேண்டும்.
அ.தி.மு.க ஆட்சியின் போது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்கள் உடனுக்குடன் இயக்கம் செய்யப்பட்டு அதற்கு உரிய பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் நெல்கள் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படாமல் நாட்கள் கணக்கில் தேங்கி கிடக்கிறது. இதனால் நெல்மணிகள் முளைத்து வீணாகி விடுகிறது. விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 2026 தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் இந்த நிலை மாறும்.
தற்போதைய ஆட்சியில் எம். சாண்ட், ஜல்லி விலைகள் வேகமாக உயர்ந்துள்ளது. இதனால் கட்டுமான பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் ஆற்று மணல் எடுக்க கூட தடை விதித்தோம். ஏனென்றால் ஆற்றில் அதிகளவு மணல் இருந்தால்தான் நிலத்தடி நீர் மட்டும் உயரும். நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தால் தான் தண்ணீர் வளம் பெருகும். தற்போது சட்டவிரோதமாக மணல் திருடப்பட்டு வருகிறது. கரூர் பகுதியில் திருட்டு மணல் கடத்தலை தடுக்க முயன்றவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். மணல் கடத்தலை தடுக்க வேண்டும்.
தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. தினமும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்கள் அரங்கேறி வருகிறது. தி.மு.க அரசு காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடவில்லை. ஆனால் நான் முதலமைச்சராக இருந்தபோது சட்டம் ஒழுங்கு சரியாக பாதுகாக்கப்பட்டது.
மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க தடுப்பணை கட்ட அதிமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. 4 இடங்களில் இதற்கான பணி தொடங்கினோம். ஆனால் அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. தற்போது தடுப்பணை கட்டும் பணி தி.மு.க ஆட்சியில் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
இதேபோல் மிக முக்கியமாக காவேரி - கோதாவரி நதிகள் இணைப்பு திட்டம் கொண்டுவர முயற்சி செய்து இது தொடர்பாக ஆந்திரா ,தெலுங்கானா ,ஒடிசா மாநில முதலமைச்சர்களிடம் பேசி சம்மதம் வாங்கினோம். முக்கியமான இந்த காவேரி- கோதாவரி திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் தமிழ்நாட்டில் தண்ணீர் வளம் பெருகி பற்றாக்குறை இருக்காது. விவசாயத்திற்கும் தேவையான தண்ணீர் கிடைக்கும். மத்திய அரசிடமும் அனுமதி வாங்கிவிட்டோம்.
ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போதைய தி.மு.க ஆட்சியில் முக்கியமான இந்த காவேரி- கோதாவரி திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர் . இதேபோல் நடந்தாய் வாழி காவிரி திட்டத்தையும் கிடப்பில் போட்டு விட்டனர். மேலும் ஆற்று நீர் மாசு அடையாமல் தடுக்கவும் கொண்டுவரப்பட்ட திட்டத்தையும் செயல்படுத்தாமல் விட்டுவிட்டனர்.
அ.தி.மு.க ஆட்சியில் மருத்துவ துறை சிறந்து விளங்கியது . புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தனியார் மருத்துவமனைக்கு நிகராக அரசு மருத்துவமனை விளங்கியது. கொரோனா காலத்தில் பரவல் கட்டுப்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு தான். நாங்கள் எடுத்த சீரியல் முயற்சியால்தான் இது சாத்தியமானது.
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளும் உடனுக்குடன் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், உதயகுமார், அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல், காந்தி, மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர், கொள்கை பரப்பு துணை செயலாளர் துரை திருஞானம், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் அறிவுடைநம்பி மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.






















