சிலிகேட் நிறுவனத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை மறுப்பு- திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
’’வெள்ளக்குடி கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வந்த நிலையில் இயந்திரமயமாக்கத்தால் உள்ளூர் மக்களுக்கு வேலை மறுப்பு’’
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் வெள்ளகுடி கிராமத்தில் டைமண்ட் சிலிகேட் மற்றும் நரிமணம் சிலிகேட் ஆகிய இரண்டு தனியார் நிறுவனங்கள் ஒரே நிர்வாகத்தின் கீழ் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வெள்ளக்குடி கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் நாளடைவில் அதிக அளவில் எந்திரங்களைக் கொண்டு வடமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியும் அதிகளவில் சிலிகேட் நிறுவனமானது ஈடுபட்டு வந்தது. இந்த செயலுக்கு உள்ளூர் கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் மேலும் உள்ளூர் கிராம மக்களுக்கு அதிக வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வைத்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திருவாரூர் கோட்டாட்சியர் மற்றும் திருவாரூர் வட்டாட்சியர் ஆகியவர்கள் சமாதானக் கூட்டம் நடத்தி வழங்கிய இடைக்கால தீர்ப்பை ஏற்க மறுத்து மேற்படி சிலிகேட் கம்பெனி சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. இந்த நிலையில் இன்று வெள்ளகுடி கிராம மக்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுடைய ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்டவைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உங்களுடைய கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்குகங்கள் என தெரிவித்தனர். அதனடிப்படையில் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து கிராம மக்கள் தங்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனுவினை அளித்தனர்.
இந்த போராட்டம் குறித்து கிராம மக்கள் கூறுகையில், சிலிகேட் ஆலைகளில் உற்பத்தி பிரிவில் உள்ளூர் தொழிலாளர்கள் அதிகளவில் பணியமர்த்த வேண்டும், பற்றாக்குறைக்கு பக்கத்து கிராமங்களில் இருந்து தொழிலாளர்களை பணிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும், வடமாநிலத்தவர்கள் பணியமர்த்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், இந்த ஆலைக்கு தேவையான மூலப்பொருட்களை கொண்டு வரவும் இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை எடுத்துச் செல்லவும் கிராமத்து சாலைகளில் கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. நிர்வாகம் தங்களின் சொந்த செலவில் தனி சாலை அமைத்துக் கொள்ள வேண்டும், இந்த ஆலைகளில் தரவரிசை அலுவலக பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் பணிநிலை எண்ணிக்கை உள்ளிட்ட அவர்கள் சம்பந்தமான உண்மையான பதிவேடுகள் இந்த நிர்வாகத்திடம் இல்லை அதனை மாவட்ட நிர்வாகத்திடம் தெளிவுபடுத்த வேண்டும் மேலும் மாவட்ட நிர்வாகம் எங்களுடைய கிராமங்களிலுள்ள கூலித் தொழிலாளர்களுக்கு சிலிகேட் நிறுவனத்தில் பணி வழங்குவதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.