நானா மருந்து தயார் செய்து தர முடியும்? கொரோனா பணி குறித்து திமுக எம்எல்ஏ., சர்சை பதில்!
‛‛கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நான் எதுவும் செய்யவில்லை என்றும், சீர்காழி தொகுதிக்காக நான் என்ன மருந்தா தயார் செய்து தர முடியும்? அரசு செய்து வருவதை கூட இருந்து ஒத்து பார்க்கிறேன்,’’ என திமுக எம்.எல்.ஏ., பதிலளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அமைச்சருடன் சென்று வருவதே எனது பணி என சீர்காழி எம்எல்ஏ.தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று நடவடிக்கைகளை முதல்வர், அமைச்சரும் மேற்கொள்கின்றனர். நான் அமைச்சருடன் சென்று வருகிறேன் அது மட்டுமே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எனது பணி எனவும் என்னை தொடர்பு கொள்பவர்களுக்கு உதவி செய்கிறேன் என சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி மக்களுக்கு வாழ்வாதாரம் இழப்பு, உயிரிழப்பு இழப்பையும் ஏற்படுத்தி பெரும் இன்னல்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முழு ஊரடங்கு அமல்படுத்தி, பல்வேறு இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் அமைச்சர்களை மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க உத்தரவிட்டு, அமைப்புக்கள் மாவட்டங்கள் தோறும் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன் ஒன்றாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நல துறை அமைச்சர் சிவ.மெய்யநாதன் இந்த மூன்று மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் கொரோனா தடுப்பு நடவடிக்கை செயல்பாடு குறித்து ஏபிபி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தனி சட்டமன்றத் தொகுதியில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாக சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் ஆகியுள்ளார். மக்களிடம் நன்கு அறிமுகமான இவரிடம் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினராக அவர் மேற்கொள்ளும் பணிகள் குறித்து ஏபிபி செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நான் எதுவும் செய்யவில்லை என்றும், சீர்காழி தொகுதிக்காக நான் என்ன மருந்தா தயார் செய்து தர முடியும்? அரசு செய்து வருவதை கூட இருந்து ஒத்து பார்க்கிறேன், முதல்வர் மக்களுக்கு தேவையான ஆக்சிசன், தடுப்பூசி போன்றவற்றை ஒதுக்கீடு செய்வதாகவும், அதனை மருத்துவர்கள் கையாண்டு வருகின்றனர். அதனை அமைச்சர் ஆய்வு செய்து வருகிறார். மேலும் மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது, கிராம புறங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது எனவும், மேலும் என்னை தொடர்பு கொள்பவர்களுக்கு ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ வசதிகளை செய்து தருவதாக தெரிவித்தார்.
எம்எல்.ஏ.,வின் இந்த பதில் கொரோனா பணி தொடர்பான அவரது எண்ணத்தை காட்டுவதாக சிலர் விமர்சித்து வருகின்றனர்.