முதல்வர் கோப்பை போட்டி: ஆட்சியர் எறிந்த பந்தை, லாவகமாக அடித்த எம்எல்ஏ - மயிலாடுதுறையில் சுவாரஸ்யம்
முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணையம் சாய் விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தனர்.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகமான அளவு தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வதற்கு அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. அதேபோன்று தமிழகத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்த பல்வேறு வகையான நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த போட்டியில் பள்ளி மாணவ மற்றும் மாணவர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தலாம். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மயிலாடுதுறை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்திய விளையாட்டு ஆணைய மைதானம் சாய் உள் விளையாட்டு அரங்கில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். இன்றிலிருந்து பிப்ரவரி 23ஆம் தேதி வரை மயிலாடுதுறை, சீர்காழி, காட்டுச்சேரி உள்ளிட்ட ஐந்து விளையாட்டு மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகிறது.
ஓட்டப்பந்தயம், கைப்பந்து, ஹாக்கி, கால்பந்து, குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என 50 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என தகுதி வாரியாக தரம் பிரிக்கப்பட்டு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட உள்ளது. பள்ளி மாணவர்களுக்கான போட்டியில் 5000 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். சாய் விளையாட்டு அரங்கில் கைப்பந்து போட்டி முதல் போட்டியாக தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து,1500 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்.
இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். வெற்றி பெறுபவர்களுக்கு கேடயங்களும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. போட்டிகளை நடத்த 40 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சாய் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் முதல் போட்டியாக கைப்பந்து போட்டி துவங்கியது. இதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கைபந்தை தூக்கி எறிய அதனை லாவகமாக மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் அடித்து விளையாட்டி போட்டியை தொடங்கி வைத்த நிகழ்வு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.