தஞ்சை மாவட்டம் குருங்குளத்தில் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்
தஞ்சை மாவட்டம் குருங்குளம் பகுதியில் கால்நடைகளுக்கு இலம்பி நோய் தடுப்பூசி போடப்பட்டது.
தஞ்சை மாவட்டம் குருங்குளத்தில் கால்நடைகளுக்கு பரவும் இலம்பி நோயை தடுக்கும் வகையில் தடுப்பூசி முகாம் நடந்தது. இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் கால்நடைகளுக்கு இலம்பி நோய் பரவுவதை தடுக்கும் வகையில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி தஞ்சை மாவட்டம் குருங்குளம் பகுதியில் கால்நடைகளுக்கு இலம்பி நோய் தடுப்பூசி போடப்பட்டது.
கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் முகாமை தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் சையத் அலி முன்னிலையில் கால்நடை மருத்துவர் செரீப் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் அந்தோணி, ஜெயந்தி, ஞானசேகரன் மற்றும் மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு 400-க்கும் அதிகமான கால்நடைகளுக்கு இலம்பி நோய் தடுப்பூசியை செலுத்தினர். கிராமப்புறங்களில் கால்நடைகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. இந்த இலஞ்சி நோய் பரவாமல் இருப்பதற்காக இதுவரை 10க்கும் அதிகமான கிராமங்களில் முகாம் நடத்தப்பட்டது. இதில் கால்நடை வளர்ப்பவர்கள் ஆர்வத்துடன் தங்கள் கால்நடைகளை அழைத்து வந்து தடுப்பூசி போட்டு அழைத்துச் சென்றதை காண முடிந்தது.
இதுகுறித்து கால்நடை உதவி மருத்துவர் செரீப் கூறுகையில், நாஞ்சிக்கோட்டை மற்றும் ஏழுப்பட்டி கால்நடை மருந்தகத்துக்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் தொடர்ந்து பத்து நாட்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும் என்றார்.
பேட்டரி வாகனம் துவக்க விழா:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு மின்கலம் மூலம் இயங்கும் பேட்டரி வாகனம் துவக்க விழா நடைபெற்றது.
பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள் கோவி.அய்யாராசு, துரைமுருகன், பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரின் நேர்முக உதவியாளர் முகமது ரிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் வரவேற்றுப் பேசினார். விழாவில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் கலந்துகொண்டு திடக்கழிவு மேலாண்மை பணிக்கு மின்கலம் மூலம் இயங்கும் பேட்டரி வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் தேன்மொழி உதயகுமார், முத்து மேரி மைக்கேல் ராஜ், ஜாஃபர் அலி, புஷ்பா சக்திவேல், கீர்த்தி வாசன், சமீரா பர்வீன், பிரேம்நாத் பைரன், பாலகிருஷ்ணன், பிரகாஷ், விஜயா, கஜலட்சுமி, கோட்டையம்மாள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.