மயிலாடுதுறை: தூர்வார ஒரு அளவு இல்லையா? படாரென உள்வாங்கிய பாலம்.!
மயிலாடுதுறை அருகே கோயில் குளம் 20 அடி ஆழம்வரை தூர்வாரியதால் தண்ணீர் செல்லும் பாலம் உள்வாங்கி போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூர் பகுதியில் பாலாகுடி பன்னீர் வெளியில் மயிலாடுதுறையை இணைக்கும் சாலை உள்ளது. இந்த சாலை மயிலாடுதுறை, மணல்மேடு செல்லும் சாலையிலிருந்து பிரிந்து மேலாநல்லூர்வரை செல்லும் இந்த சாலை, 10 க்கும் மேற்பட்ட கிராமமக்களுக்கு பிரதான சாலையாக இருந்து வருகிறது. மேலும் இந்த சாலையில் அரசு நகரப்பேருந்துகளும், அப்பகுதி மக்கள் நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் ஏராளமானவை தினம் தோறும் சென்று வருகிறது. இந்நிலையில் சாலையை ஒட்டி பாலாகுடி பிள்ளையார்கோயிலை சேர்ந்த இரண்டு ஏக்கரிலான பெரிய அளவு குளம் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கும் பாலாகுடி வாய்க்காலுக்கும் இடையே அக்கிராமத்தின் பிரதான சாலை செல்வதால் அங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு இந்த குளம் முழுவதும் தூர்வார் வாரப்பட்டுள்ளது. இதனால் 15 அடி ஆழம் முதல் 20 ஆழம்வரை மண் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மணல்மேடு பகுதியில் 85 மில்லிமீட்டர் மழை பெய்தது, அத்துடன் பாலாகுடி வாய்க்காலில் விடப்பட்ட தண்ணீர் பிள்ளையார் கோயில் குளத்திற்கு பாய்ந்துள்ளது. சாலையை ஒட்டி பாலம் அமைக்கப்பட்டுள்ள குளத்தில் 15 அடி ஆழத்திற்கு தூர் வாரியதால் பாலம் வழியாகச் சென்ற தண்ணீர் சிறுகச்சிறுக சாலையை அரித்து பாலத்தின் கீழும் தண்ணீர் வேகமாக குளத்திற்குச் சென்றதால் பாலம் முழுவதும் இடிந்து சாலையுடன் உள்வாங்கியது.
கிராமத்தில் பிரதான சாலையில் உள்ள பாலம் உடைந்ததால் அப்பகுதியில் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது, இதனால் அப்பகுதியில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. அருகில் உள்ள பிள்ளையார்கோயில் வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வருகின்றன. உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பாலம் மற்றும் சாலையை சரிசெய்து மீண்டும் பேருந்து போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று பாலாகுடி, பன்னீர்வெளி மற்றும் மேலாநல்லுர் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் குளம் தூர் வாருவதற்கு என ஒரு வரைமுறை உள்ளது என்றும், மணல் தேவைக்காக சட்டத்திற்கு புறம்பாக குளம் தூர்வார அரசு நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் குளம் தூர்வாரப்பட்டுள்ளதால்தான் பாலத்தின் அடியில் அரிப்பு ஏற்பட்டு பாலம் முழுவதும் இடிந்து உள்வாங்கியாதாக குற்றம்சாட்டியுள்ள அப்பகுதி கிராம மக்கள் பாலம் உள்வாங்க காரணமான குளத்தினை தூர்வார ஒப்பந்ததாரர் மீது அரசு நடவடிக்கை எடுத்து இடிந்த இந்த பாலத்தினை உடனடியாக போர்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து விரைவாக புதிய பாலம் முழு தரத்துடன் கட்டி துண்டித்து போய்வுள்ள கிராமத்தின் போக்குவரத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும், இல்லை எனில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்றும், வேலைகளுக்காக நகர்ப்புற செல்லமுடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.