காற்றானால் என்ன? கனமழையானால் என்ன? நாட்டியத்தை நிறுத்தாமல் ஆடிய நடன கலைஞர்கள்: எங்கு தெரியுங்களா?
மழை இடி, மின்னல், காற்றுடன் கன மழை பெய்தது. கனமழையிலும் நாங்கள் ஈசனுக்கு இசை அஞ்சலி செய்வோம் என்று நாட்டியத்தை நிறுத்தாமல் பரத கலைஞர்கள் தொடர்ந்து நடனம் ஆடியதுதான் நவராத்திரி விழாவின் மைல்கல்லாகும்.

தஞ்சாவூர்: தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மதியம் ஆரம்பித்த மழை மாலையில் கனமழையாக மாறியது. இடி,மின்னல் காற்றுடன் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கனமழையிலும் தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி விழாவை ஒட்டி பரதநாட்டிய கலைஞர்கள் தங்களின் பரத நாட்டியத்தை நடத்தினர்.
தஞ்சையில் காலை முதல் வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது. பகல் நேரத்தில் வெளியில் தலை காட்ட முடியாத அளவிற்கு கோடை வெப்பம் போல் வெயில் தாக்கம் அதிகம் இருந்தது. மாலை நேரத்தில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது, தஞ்சை, கண்டியூர் மேல திருப்பூந்துருத்தி, திருவையாறு, விளார், நாஞ்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்

அதே நேரத்தில் காலை முதல் வெயிலால் அவதிப்பட்ட வந்த மக்களுக்கு மாலையில் பெய்த மழை சற்று குளிர்ச்சியை ஏற்படுத்தி ஆறுதலை தந்தது. தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி கலை விழா முன்னிட்டு ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு காயத்ரி அலங்காரம் நடந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை பெரியகோயில் என்றழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு பெருவுடையார் கோயில் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது, இக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த 22.ம் தேதி சிறப்பாக தொடங்கியது. இதில் நான்காம் நாளாக இன்று பெரியநாயகி அம்மனுக்கு காயத்ரி அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் நந்தி மண்டபத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சியை கண்டு ரசித்தும் சுவாமியை தரிசனமும் செய்தனர்.
இந்த கலை நிகழ்ச்சியும் கொட்டும் மழையில் தடைபடாமல் நடந்தது. பரத கலைஞர்கள் திமிக்க, திமிக்க தக்க திமிக்கிட தோம், தோம் தோம் தகிட்ட தகிட்ட தக்கதோம் ஈசா சர்வேசா, சிவ சம்போ சம்போ சிவசம்போ என்ற நட்டுவாங்கத்திற்கு ஏற்ப இடி, மின்னல், காற்று கனமழை தங்கள் பங்கிற்கு இசைக்க பரதம் ஆடி பெருவுடையாருக்கு இசை அஞ்சலி செலுத்தினார்கள் பரத கலைஞர்கள். மழையையும் பொருட்படுத்தாமல் பரத கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்தியதை கண்டு பக்தர்கள் உற்சாகமாக கைத்தட்டி பாராட்டுக்களை குவித்தனர்.
நவராத்திரி விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் நந்தி மண்டப மேடையில் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பாரத கலைஞர்கள் நந்தி மண்டபம் மேடையில் நாட்டியம் ஆடி கொண்டிருந்த நேரத்தில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. தூறலாக தொடங்கிய மழை இடி, மின்னல், காற்றுடன் கன மழை பெய்தது. கனமழையிலும் நாங்கள் ஈசனுக்கு இசை அஞ்சலி செய்வோம் என்று நாட்டியத்தை நிறுத்தாமல் பரத கலைஞர்கள் தொடர்ந்து நடனம் ஆடியதுதான் நவராத்திரி விழாவின் மைல்கல்லாகும்.
தி மிக்க திமிக்க தக்க திமிக்கிடதோம். தோம் தோம் தகிட்டத தகிட்டத தக்கதோம் திமிக்க திமிக்க தக்க திமிக்க திமிக்க தக்க ஈசா சர்வேசா தோம் தோம் சிவ சம்போ, சம்போ சிவ சம்போ என நட்டுவாங்கம் இசைக்க தாளம் தப்பாமல் நடனம் ஆடி பெருவுடையாருக்கு இசை அஞ்சலி செலுத்தினார்கள் பரதநாட்டிய கலைஞர்கள். மழையில் கூடியிருந்து நாட்டியத்தை ரசித்த மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர் .




















