மயிலாடுதுறையில் எந்த பகுதியில் மழை பாதிப்பு? புகார்களுக்காக கொடுக்கப்பட்ட அவசர உதவி எண்கள் இதோ..
மயிலாடுதுறையில் 24 மணி நேரமும் இயங்கும் பருவ மழை கட்டுப்பாட்டு அறையை துவக்கி வைத்து, தனது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மாவட்ட ஆட்சியர் சரிபார்த்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று சீர்காழியில் அதிகபட்சமாக 19 சென்டிமீட்டர் மழை பெய்துள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையில் பற்றி மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் பருவ மழை கட்டுப்பாட்டு அறையை தூவக்கி வைத்து அங்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வெளியிடப்பட்டுள்ள தொலைபேசி எண் சரியாக இயங்குகிறதா என்று கொடுக்கப்பட்ட எண்ணிற்கு தனது செல்போன் மூலம் தொலைபேசி எண் அழைத்து பார்த்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து தொலைபேசியில் அழைத்தவர்கள் விபரம் எத்தனை மணி, எந்த இடத்தில் பாதிப்பு, தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரி, தகவல் தெரிவித்த அதிகாரி ஆகியவற்றின் விபரங்கள் குறிப்பேட்டில் இருக்க வேண்டும் என்று கட்டுப்பாட்டு அரை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். வடகிழக்கு பருவமழை கட்டுப்பாட்டு அறையில். 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 04364-222588 என்ற எண்ணிலும், 9487544588 என்ற செல்போன் எண்ணிலும், 81489917588 என்ற வாட்ஸ் அப்பிலும் பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு பாதிப்புகளை அறிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தாலுக்கா வாரியாக மழையின் விகிதம் மாறுபடும் நிலையில் மழைமானி இல்லாத குத்தாலம் தாலுக்காவில் மழைமானி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குத்தாலம் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, மணல்மேடு, சீர்காழி, கொள்ளிடம் தரங்கம்பாடி, ஆகிய பகுதிகளில் மழையை அளவிட வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, அலுவலகங்களில் மழைமானி உள்ளது. அதனால் அப்பகுதிகளில் மழைஅளவு துல்லியமாக கணக்கிடப்பட்டு வருகிறது. மழையின் அளவை பொறுத்தே நிலத்தடிநீர்மட்டம், விவசாயத்திற்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு, உள்ளிட்டவை கணக்கிடப்பட்டு அரசின் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆண்டுதோறும் பெய்து வரும் கனமழையின் அளவு தாலுக்கா அளவில் மாறுபடுகிறது. இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை 8.30 மணிவரை கடந்த 24 மணிநேரத்தில் மயிலாடுதுறையில் 20.70 மில்லிமீட்டர், மணல்மேடு பகுதியில் 10.60 மில்லிமீட்டர், சீர்காழியில் 40.8 மில்லிமீட்டர், கொள்ளிடத்தில் 23 மில்லிமீட்டர், தரங்கம்பாடியில் 4.10 மில்லிமீட்டர் மழை அளவு பதிவாகி மாவட்டத்தில் சராசரியாக 19.84 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஆனால் குத்தாலம் தாலுக்கா பகுதிகளில் மழைமானி இல்லாததால் மழை அளவு கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இதனால் குத்தாலம் தாலுக்கா பகுதியில் 40 ஆயிரம் ஏக்கருக்குமேல் சம்பா தாளடி செய்யும் விவசாயிகள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுவதாகவும், உடனடியாக குத்தாலம் தாலுக்கா பகுதியில் மழைமானி அமைக்க வேண்டும் என்று இன்று குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் 18 ஆவது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் வினோத் வலியுறுத்தினார். ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் மழைமானி அமைப்பதற்கு அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண:
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற