கரையேறுவார்களா கரைக்காவலர்கள்... கருணைக்காட்டுவாரா டெல்டா நாயகன்: தவிக்கும் 500 பேர்
ரெகுலேட்டர்களை தினமும் ஏற்றி இறக்குவது போன்ற என்ற கள நிலவரங்களை உடனுக்குடன் அதிகாரிகளுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருபவர்கள் தான் லஸ்கர் எனப்படும் கரைக்காவலர்கள்.

தஞ்சாவூர்: காத்திருந்து... காத்திருந்து ஆண்டுகள் கடந்திடுச்சு. எப்போங்க எங்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்கும் என்று மிகவும் வேதனையுடன் காவிரி டெல்டாவில் 15 ஆண்டுகளாக லஸ்கர் என்று அழைக்கப்படும் 500 கரைக்காவலர்கள் நடு ஆற்றில் சிக்கி தவிப்பது போல் காத்திருக்கின்றனர். அவர்கள் வாழ்வில் கரை ஏறுவார்களா என்ற கேள்விக்குறியும் பலமாக எழுந்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக் கால்வாய் என 37 ஆறுகள் 1,970 கி.மீட்டர் நீளத்துக்கும், 21,629 கிளை வாய்க்கால்கள் 24,624 கி.மீட்டர் நீளத்துக்கும் செல்கிறது. இந்த ஆறுகளையும், கால்வாய்களையும் இரவு -பகலாக கண்காணித்து, எந்த வாய்க்காலில் எங்கு பழுது உள்ளது, எவ்வளவு தண்ணீர் செல்கிறது, படித்துறைகள் எப்படி உள்ளது, ரெகுலேட்டர்களை தினமும் ஏற்றி இறக்குவது போன்ற என்ற கள நிலவரங்களை உடனுக்குடன் அதிகாரிகளுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருபவர்கள் தான் லஸ்கர் எனப்படும் கரைக்காவலர்கள்.
நீர்வள ஆதாரத்துறையில் நியமிக்கப்படும் இந்த கரைக்காவலர்கள் ஆற்றில் தண்ணீர் வரும் முன்பாக ரெகுலேட்டர்களை சீரமைக்கும் பணியும், ஆற்றில் தண்ணீர் திறந்த பின்னரும், மழைக்காலங்களிலும் எந்தந்த பகுதியில் ஆறுகள், வாய்க்கால்கள் உடைப்பெடுக்கிறது என்பதை உன்னிப்பாக கவணித்து அதற்கு ஏற்றார் போல் முன்கூட்டியே தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருபவர்கள்தான் இந்த கரைகாவலர்கள்.
தமிழகம் முழுவதும் நீர் வள ஆதாரத்துறையில் கடைநிலைப் பணியாளர்களாக கரைக்காவலர்கள் உள்ளனர். இதில் கடந்த 2010-ம் ஆண்டு 10 ஆண்டுகள் பணி முடித்த தற்காலிக பணியாளர்களை அப்போது நிரந்தரம் செய்ப்பட்டனர். அதன் பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு தொகுப்பூதியம் அடிப்படையில் சிலர் பணியமர்த்தப்பட்டனர். அதன் பின்னர் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானவர்களும், டெல்டா மாவட்டங்களில் 500 கரைக்காவலர்கள் பணி நிரந்தரம் செய்யாமல் தற்காலிக பணியாளர்களாக கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் 1,200 பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் வெறும் 500 பேர் பணியாற்றுவதால், பலரும் பணி பாதுகாப்பு இல்லாமல், பணிச்சுமையுடன் மன உளைச்சலுடன் பணியாற்றி வருகின்றனர். தற்காலிகமாக பணியாற்றிய பலரும் வயது மூப்பின் காரணமாக இறந்து விட்டனர். அந்த காலிப்பணியிடங்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
நீர்வள ஆதாரத்துறையில் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடி தூர்வாரும் பணிகள், கட்டுமானப் பணிகள் என பல்வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் இந்த துறையில், விவசாயிகளின் உயிர் நாடியாக திகழும் பாசனத்துக்கு தேவையான தண்ணீரை உரிய நேரத்தில் கொண்டு போய் சேர்க்கும் இந்த தங்களின் வாழ்வாதாரத்தை டெல்டா நாயகன் என்று அழைக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் கரையேற்றுவாரா என்று கரைக்காவலர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து லஸ்கர் என்கிற கரைக்காவலர்கள் தரப்பில் தெரிவித்ததாவது: பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையில் கடைநிலை ஊழியர்களாக கரைக்காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இரவு - பகல் பாராமல் பணியாற்றும் எங்களுக்கு போதிய ஊதியம் இல்லை. பணியில் பாதுகாப்பு இல்லை. நாங்கள் பணிநிரந்தரம் கோரி வருகிறோம், ஆனால் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை, கடந்த 2010-ம் ஆண்டுக்கு பிறகு தமிழகம் முழுவதும் ஆயிரகணக்கானோரும், டெல்டாவில் 500 பேரும் தற்காலிகமாக பணியாளர்களாகவே பணியாற்றி வருகிறோம்.
கடந்த 2019-ம் ஆண்டு 3,407 பேர் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டனர். அதன்பின்னரும் காலிப்பணியிடமும் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. எனவே கரைக்காவலர்களை பணி நிரந்தரம் செய்வதோடு,தமிழக அரசு காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் கரைக்காவலர்கள் குறித்து அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். அதே போல் காலிப்பணியிடங்கள் அதிமாக உள்ளது. இதை நிரப்பிட அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.





















