Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
இந்த விபத்தானது கீழக்கரை பகுதியில் நடைபெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த 7 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 ஐயப்ப பக்தர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தானது கீழக்கரை பகுதியில் நடைபெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த 7 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்ததும் உடனடியாக வந்த கீழக்கரை போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்தது அதிகாலை நேரம் என்பதால் அதிவேகமாக வந்ததால் விபத்து நிகழ்ந்ததா அல்லது தூக்க கலக்கத்தில் ஓட்டுநர் இருந்ததால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்த முதற்கட்ட விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் இரண்டு கார்களின் முன்பகுதியும் அப்பளம் போல நொறுங்கியுள்ளது. அதேசமயம் உயிழந்தவர்கள் உடல்கள் அடையாளம் காணும் பணியானது நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய கார்களில் ஒன்று ஆந்திராவைச் சேர்ந்தது என தெரிய வந்துள்ளது. அதில் ஐயப்ப பக்தர்கள் பயணித்துள்ளனர். அதேசமயம் ஏர்வாடி நோக்கி மற்றொரு கார் சென்றுள்ளது. இந்த நிலையில் கீழக்கரை அருகே விபத்தானது நடைபெற்றுள்ளது.
நடந்தது என்ன?
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 5 ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்காக ராமேஸ்வரம் நோக்கி சென்றுள்ளனர். இவர்களது கார் மீது கீழக்கரை - மதுரை விலக்கு ரோடு அருகே வந்தபோது பின்னால் வந்த கீழக்கரை நகர்மன்ற தலைவரின் சொகுசு கார் மோதியது. இதனால் ஐயப்ப பக்தர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் அந்த வாகனத்தில் பயணித்த 4 ஐயப்ப பக்தர்கல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதேபோல் நகர் மன்ற தலைவரின் கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியானார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி வாகனம் மீது மோதிய மினி பஸ்
இதற்கிடையில் கோவில்பட்டி அருகே சாலை வளைவில் பள்ளி வேன் மீது மினி பஸ் மோதிய விபத்தில் 4 மாணவர்கள் காயமடைந்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஓட்டுநரான வெள்ளைச்சாமி என்பவர் தேவாலயம் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் பள்ளி வேனுக்கான டீசல் நிரப்பி விட்டு வந்துள்ளார். அப்போது கூசாலிப்பட்டியில் இருந்து அண்ணா பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து தீடிரென பள்ளி வாகனத்தின் மீது மோதியது. இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





















