அங்கன்வாடி ஊழியர்கள் 385 பேர் கைது: எதற்காக தெரியுங்களா?
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 385 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை, அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 385 பேர் போலீஸார் கைது செய்தனர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு, சங்க மாவட்ட செயலாளர் சங்கீதா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் லட்சுமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சிஐடியு மாவட்ட தலைவர் ஜெயபால், மாவட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
போராட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக உடனடியாக அறிவிக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு உடனடி நிரந்தர பதவி உயர்வு வழங்கி, குறைந்த பட்ச ஊதியம் மாதம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் என அறிவிக்க வேண்டும்.
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு 100 நாள் மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள், உதவியாளர்களுக்கு உடனடியாக குடும்ப ஓய்வூதிய நலன்கள் வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள், உதவியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 385 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் வைத்திருந்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.
கட்டுமானத் தொழிலாளர்கள் மனு
கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கம் ஏஐசிசிடியு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
சிபிஐ எம் எல் மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமையில், ஏஐசிடபிள்யூஎப் தேசியக் குழு உறுப்பினர் ராஜன், மாவட்ட குழு ஜெயபால், நடராஜன், அல்போன்ஸ், ரமேஷ், ராமலிங்கம், ஏஐசிசிடியு மாவட்ட குழு ரவிச்சந்திரன், மாரியப்பன், , மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். வீடுகள் இல்லாத அனைத்து தொழிலாளர்களுக்கும் ஐந்து சென்ட் வீட்டுமனை உடன் கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்த குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்த வேண்டும், நல வாரிய நல திட்ட உதவி தொகை அனைத்தையும் இரட்டிப்பாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தது.
இதில் 50க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டம் நடத்த இவர்களுக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆர்ப்பாட்டம் செய்தால் கைது செய்யப்படுவீர்கள் என்று போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து தங்களின் கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் அளித்தனர்.




















