டிப்பர் லாரி மோதி 20 செம்மறியாடுகள் பலி... பொதுமக்கள் சாலைமறியல் செய்ததால் பரபரப்பு
ருப்பையாவுக்கு சொந்தமான 20 செம்மறி ஆடுகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனால் அங்கு திரண்டு வந்த கிராம மக்கள், சாலையில் விபத்து ஏற்படுத்திய லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்: அரியலூர் அருகே மிக வேகமாக வந்த டிப்பர் லாரி மோதி 20 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் அருகே உள்ள கொல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். எப்போதும் மேய்ச்சலுக்காக காலையில் செம்மறி ஆடுகளை அழைத்து சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு அழைத்து வருவதும் வழக்கம். அந்த வகையில் நேற்றும் வழக்கம்போல மேய்ச்சலுக்காக செம்மறி ஆடுகளை ஓட்டிச் சென்று விட்டு, மாலையில் அரியலூர் - செந்துறை சாலையில் வீடு நோக்கி திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது தனியார் சிமெண்ட் ஆலை அருகே ஆடுகளை ஓட்டி வந்து கொண்டிருந்தபோது, சிமெண்ட் ஆலையிலிருந்து கிளிங்கர் ஏற்றிக் கொண்டு, சேலம் நோக்கி வேகமாக சென்ற டிப்பர் லாரி எதிர்பாராத வகையில் செம்மறி ஆடுகள் மீது மோதியது.
இதில் கருப்பையாவுக்கு சொந்தமான 20 செம்மறி ஆடுகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனால் அங்கு திரண்டு வந்த கிராம மக்கள், சாலையில் விபத்து ஏற்படுத்திய லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த செம்மறி ஆடுகளின் மதிப்பு சுமார் 5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலைமறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் தெரிவித்ததாவது: விவசாயிகள் தங்களின் வருமானத்திற்காக ஆடுகள், மாடுகளை வளர்த்து வருகின்றனர். இப்பகுதியில் சிமெண்ட் ஏற்றிக் கொண்டு செல்லும் டிப்பர் லாரிகள் வேகமாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. இப்போது 20 செம்மறி ஆடுகள் பலியாகி உள்ளது. இதன் மதிப்பு ரூ.5 லட்சத்திற்கு மேல் இருக்கும். இதனால் அந்த ஆடுகளை வளர்த்தவருக்கு மிகவும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதியில் அதி வேகமாக இயக்கப்படும் லாரிகள் மீது போலீசார் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.





















