(Source: ECI/ABP News/ABP Majha)
TN Budget 2023: மகளிர் கவனத்திற்கு.. மகளிர் சுய உதவிக்குழுக்கான வங்கி கடன் உயர்வு: எவ்ளோ தெரியுமா?
மகளிர் சுய உதவி குழு 24 ஆயிரத்து 212 கோடி ரூபாய்க்கு வங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது. வரும் நிதியாண்டில் 30 ஆயிரம் கோடி வரை வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்படுள்ளது.
தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டிற்க்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட் தாக்கல் தொடங்கிய சில நிமிடங்களிலே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சிலவற்றை காணலாம்.
- மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்.
- தமிழ்நாட்டில் தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்.
- வயது முதிர்ந்த 590 தமிழ் அறிஞர்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கும் வகையில் இலவச பேருந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படும்.
- கடல் பல கடந்து, சமர் பல வென்று உலகாண்ட சோழர்களின் பங்களிப்பை பார்போற்றும் வகையில் பறைசாற்றிட தஞ்சை மாவட்டத்தில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்
- சென்னை சங்கமம் கலை விழா போன்று மேலும் எட்டு நகரங்களில் நடத்தப்படும்.
- தமிழ்நாடு முழுக்க 20 புதிய நாட்டுப்புறக் கலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்
- இலங்கைத் தமிழர்களுக்கு 3959 வீடுகள் கட்ட 233 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தமிழக ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்தால் அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி 20 லட்சத்திலிருந்து 40 லட்சமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும்.
- ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் தேர்ந்தெடுக்கப்பட்ட(மதிப்பீட்டு தேர்வு மூலம்) 1000 மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு தயாராக ரூபாய் 7 ஆயிரத்து 500 முதன்மை தேர்வுக்கு ரூபாய் 25 ஆயிரம் உதவித்தொகை என ஆண்டுக்கு ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் வரும் ஜூன் மாதம் திறந்து வைக்கப்படும்.
- மகளிர் சுய உதவி குழு 24 ஆயிரத்து 212 கோடி ரூபாய்க்கு வங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது. வரும் நிதியாண்டில் 30 ஆயிரம் கோடி வரை வழங்கப்பட இருக்கிறது.
- சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கீடு
- புதிய பேருந்துகளை வாங்கவும், 500 பழைய பேருந்துகளை மாற்றவும் ரூ. 500 கோடி ஒதுக்கீடு
- கோவையில் ரூ. 9000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்படும்.
இந்த பட்ஜெட்டில் மிக முக்கியமாக மக்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குடும்பத்தலைவிகளுக்கான 1000 ரூபாய் உரிமை தொகை தான். ஏற்கனவே இந்த அறிவிப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த மாதம் ஈரோட்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது இந்த பட்ஜெட் தாக்கலில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்திருந்தார். “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கத் தொடங்குவதற்கான தேதி குறித்த அறிவிப்பு பட்ஜெட் தாக்கலில் இடம்பெறும்” என்று உறுதியளித்தார்.