Shankar Jiwal DGP Profile: தமிழ்நாடு டி.ஜி.பி.யான மெக்கானிக்கல் இன்ஜினியர் - யார் இந்த சங்கர்ஜிவால்?
தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள சங்கர்ஜிவாலுக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் டி.ஜி.பி.யாக பதவி வகித்து வந்த சைலேந்திரபாபுவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. காவல்துறையில் இருந்து சைலேந்திரபாபு ஓய்வு பெற்றதையடுத்து, புதிய டி.ஜி.பி.யாக சங்கர்ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை காவல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்த சங்கர்ஜிவாலே, புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியான நிலையில் அது உறுதியாகியுள்ளது.
யார் இந்த சங்கர்ஜிவால்?
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா நகரத்தில் 1965ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ந் தேதி பிறந்தவர் சங்கர்ஜிவால். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். மெக்கானிக்கல் பொறியயில் பட்டதாரியான இவர் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா எனப்படும் செயில் மற்றும் பெல் நிறுவனங்களில் படிப்பை முடித்த பிறகு சிறிது காலம் பணியாற்றினார்.
பின்னர், குடிமைப்பணி தேர்வின் பின்பு தன்னுடைய கவனத்தை திசைதிருப்பிய சங்கர்ஜிவால், 1990ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பேற்றார். தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியாகவே அவர் தேர்வானார். 1993ம் ஆண்டு முதல் பல்வேறு முக்கிய உயர் பொறுப்புகளை சங்கர்ஜிவால் வகித்து வருகிறார்.
எஸ்.பி., கமிஷனர், டி.ஐ.ஜி., ஐ.ஜி.
ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்ற பிறகு ஏ.எஸ்.பி.யாக மன்னார்குடியிலும், சேலத்திலும் பணியாற்றினார். அதன்பின்பு, சேலம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்தார். அதற்கு பிறகு தென்மண்டல போதை பொருள் தடுப்ப பிரிவு மண்டல தலைவராக 2004 முதல் 2006ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தார்.
இதையடுத்து, திருச்சி காவல் ஆணையராக பொறுப்பு வகித்தார். பின்னர் உளவுப்பிரிவு துறை டி.ஜி.ஜி.யாக நியமிக்கப்பட்ட சங்கர்ஜிவால் அதே துறையின் ஐ.ஜி.யாகவும் நியமிக்கப்பட்டார். பின்னர், பதவி உயர்வு பெற்ற சங்கர்ஜிவால் ஏ.டி.ஜி.பி.யாக சிறப்பு அதிரடிப்படைக்கு பொறுப்பு வகித்தார்.
காவல் ஆணையர் டூ புதிய டி.ஜி.பி.
தமிழ்நாடு அரசின் பல்வேறு முக்கிய காவல் உயர் பொறுப்புகளை வகித்த சங்கர்ஜிவால் 8 ஆண்டுகள் அயல்பணியாக மத்திய அரசு பணிக்கு சென்றார். பின்னர், மீண்டும் தமிழ்நாட்டிற்கு திரும்ப அழைக்கப்பட்ட சங்கர்ஜிவால் அதிரடிப்படை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். மேலும், சென்னை உளவுத்துறை ஐ.ஜி.யாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு, கடந்த 2021ம் ஆண்டு சென்னை மாநகர காவல் ஆணையராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகள் சென்னை காவல் ஆணையராக பணியாற்றிய சங்கர்ஜிவால் தற்போது புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காவலர் பதக்கம்:
2007ம் ஆண்டு சிறந்த காவல் சேவைக்கான காவலர் பதக்கமும், 2019ம் ஆண்டு குடியரசுத் தலைவர் காவல் பதக்கமும் பெற்றுள்ளார். புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள சங்கர்ஜிவாலுக்கு காவல்துறையின் மற்ற அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Chennai New Commissioner: சென்னையின் புதிய காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மேலும் படிக்க: Shankar Jiwal DGP: தமிழத்தின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம்: தமிழ்நாடு அரசு அதிரடி!