மேகதாது 'செக்'... தமிழ்நாடு கவர்னராக எடியூரப்பா?
குஜராத், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற எந்த மாநிலங்களிலும் பாஜகவில் இளம் தலைவர்களை அடையாளம் காண முடியவில்லை. அதை சரிசெய்யும் ஒரு முயற்சியாகத் தான் எடியூரப்பா பதவி விலகியுள்ளார்.
கர்நாடகா முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பி.எஸ் எடியூரப்பா தமிழ்நாட்டின் அடுத்த ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று யூகிக்கப்படுகிறது.
கர்நாடக மாநில ஆளுநரை சந்தித்து இன்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார் எடியூரப்பா. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் மோடிக்கும் அமித்ஷாவிற்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். மேலும், தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபட உள்ளேன்" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
முதல்வர் ராஜினாமா செய்தால், ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்ய வேண்டும். எனவே, அடுத்த அரசு அமையும் வரை காபந்து (அல்லது) இடைக்கால அரசாக எடியூரப்பா தொடர்ந்து செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு ஆளுநராகிறாரா எடியூரப்பா?
தற்போது தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோகித்-ன் பதவிக்காலம் 2022ம் ஆண்டுடன் நிறைவடைகிறது. பொதுவாக, ஒரு ஆளுநரின் பதவிக்காலம் குடியரசுத் தலைவரின் விருப்பத்துக்கு உட்பட்டது(Pleasure of Predsident) . எனவே, ஆளுநரின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே அவர் நீக்கப்பட்டுவிடலாம்.
முன்னதாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை முதல்முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டு மாற்றியமைக்கப்பட்டது. இந்த அமைச்சரவை விரிவாக்கத்திற்கு எதுவாக, 13 அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அச்சூழலில், கடந்த ஜூலை 10ம் தேதி பிரதமர் மோடியை புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்தார். மேலும், ரவி சங்கர் பிரசாத் தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
இதற்கிடையே, தற்போது பதவி விலகியிருக்கும் எடியூரப்பா தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று யூகிக்கப்படுகிறது. தமிழ்நாடு- கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இந்த யூகம் பேசும் பொருளாகி உள்ளது.
இருப்பினும், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடர் அரசியலில் இருந்து கர்நாடகா மாநிலத்தில் பாஜகவின் வளர்சிக்கு பாடுபாட இருப்பதாகவும் தெரிவித்தார். 90களில் வாஜ்பாய் அமைச்சரவையில் எடியூரப்பாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இருப்பினும், மாநில அரசியலில் கவனம் செலுத்துவதற்கான அதை அவர் அப்போது ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தீவிர அரசியலில் ஈடுபடமுடியுமா?
சிவராஜ் சவுகான், வசுந்தரா ராஜீ, பி.எஸ். எடியூரப்பா, அருண் ஜெட்லி, போன்ற பிராந்தியத் தலைவர்களை அத்வானி- வாஜ்பாய் தலைமை உருவாக்கியது. இருப்பினும், 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, பிராந்தியத் தலைவர்கள் தேசிய அரசியலும், கட்சி ரீதியாவும் பலவீனமடைந்து வருகின்றனர். தற்போது பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பலரும் அமித் ஷ-மோடி கூட்டணி நேரடியாக தேர்தெடுத்து வருகிறது. சமீபத்தில் அசாம், உத்தரகாண்ட் மாநில முதல்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட விதமும் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது. மனோகர் லால் கட்டார், மகாராஷ்டிரா மாநிலத்தில் தேவேந்திர பாட்னாவிஸ், சட்டீஸ்கர் மாநிலத்தில் ராமன் சிங் ஆகியோரை முன்னிலைப்படுத்தியதில் அமித் ஷா- மோடியின் தலையீடு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்த போக்கின் அடிப்படையில், எடியூரப்பாவுக்கு தீவிர அரசியல் வாய்ப்பு மறுக்கப்படலாம் என்றே தோன்றுகிறது. மேலும், கர்நாடகா அரசியல் சூழலும் அவருக்கு சாதகமாக இருக்கவில்லை. முந்தைய காலங்களில் உயர்சாதி மற்றும் லிங்காயத்து வகுப்பினர் மட்டுமே பாஜக தீவிர ஆதரவாளர்களாக இருந்தனர். ஆனால், தற்போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலின/பழங்குடி வகுப்பினரின் நம்பிக்கையும் பாஜக பெற்று வருகிறது. மேலும், குஜராத், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற எந்த மாநிலங்களிலும் பாஜகவில் இளம் தலைவர்களை அடையாளம் காண முடியவில்லை. அதை சரிசெய்யும் ஒரு முயற்சியாகத் தான் தற்போது எடியூரப்பா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில், அண்ணாமலை நியமனமும் இதே காரணத்திற்காகத் தான். எனவே, மீண்டும் அவரை தீவிர அரசியலில் கொண்டு வர பாஜக தயங்கலாம் .
எனவே, தமிழ்நாட்டின் அடுத்த ஆளுநராக பதவியில் இருந்து விலகிய 13 அமைச்சர்களில் ஒருவரையோ (அல்லது) தென்னிந்தியாவில் கால்பதிக்க விரும்பும் பாஜக எடியூரப்பாவையோ நியமிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
மேலும், வாசிக்க: