சேவல் சண்டை போட்டிகள் நடத்துவது குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - நீதிபதிகள் கேள்வி
’’தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு’’

கரூர், தாந்தோணி பகுதியைச் சேர்ந்த பிரேம்நாத் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா பூலம்வலசு கிராமத்தில் கடந்த 20 வருடங்களாக பொங்கல் திருநாளை முன்னிட்டு சேவல் சண்டை நடத்தப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றம் சேவல் கால்களில் கத்தியை கட்டி போட்டிகள் நடத்துவதற்கு தடை விதித்துள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் வெறும் கால்களில் சேவல் சண்டை விடுவதாக உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்று சேவல் சண்டை நடத்துகின்றனர்.
ஆனால், இந்த சேவல் சண்டைப் போட்டிகளில் சட்டத்திற்கு புறம்பாக சேவல் கால்களில் கத்தியை கட்டி சண்டைக்கு விடுகின்றனர். மேலும் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்து பல்வேறு நபர்கள் சேவல்களை சண்டைக்கு விடுவதற்காக இப்பகுதிக்கு வருகின்றனர். மேலும் சேவல் சண்டை போட்டி நடத்துபவர்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால் காவல்துறையினரும் இதனை கண்டு கொள்வது இல்லை. இதனால், வருடந்தோறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.
எனவே, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா பூலம்வலசு கிராமத்தில் சேவல் சண்டை நடத்த தடை விதிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சேவல் சண்டை போட்டிகள் நடத்துவது குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் எவ்வாறு சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர். மேலும் வழக்கு குறித்த தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

