“பாஜக வேண்டாம்; முடிவை வரவேற்கிறோம்; நாங்கள் அதிமுகவுடன்தான் கூட்டணி” - புரட்சி பாரதம் கட்சி அறிவிப்பு
அதிமுக தலைமையில் அமையும் கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் என புரட்சி பாரதம் கட்சி தெரிவித்துள்ளது.
அதிமுக தலைமையில் அமையும் கூட்டணியில் பங்கேற்று நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் என புரட்சி பாரதம் கட்சி தெரிவித்துள்ளது. புரட்சி பாரதம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “ தேசிய ஜனநாயக்கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை புரட்சி பாரதம் கட்சி வரவேற்கிறது. சமீப காலமாக திராவிட தலைவர்களையும், அதிமுக மாநாட்டையும் விமர்சித்து வந்த பாஜகவை கண்டித்து, தேசிய ஜனநாயக்கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ளது.
அதிமுகவின் தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இயங்கி வரும் நிலையில், அவர்கள் எடுக்கும் முடிவிற்கு நாங்கள் உறுதுணையாக நிற்போம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும் கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சியும் ஓர் அங்கம் வகிக்கும் என்பதை கட்சியின் தலைவர் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணியில் பங்கேற்று புரட்சி பாரதம் கட்சி தேர்தலை எதிர்கொள்ளும். என்.டி.ஏ - இண்டியா என்று எந்த ஒரு கூட்டணியிலும் பங்கேற்காமல், அதிமுக தலைமையில் நாங்கள் தனி கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது, போட்டியிடுவது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாலை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி பேசியதாவது: "அண்ணாமலையின் பேச்சு தொண்டர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கிவிட்டது. இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உருவாக்கப்படும். ஓராண்டாக திட்டமிட்டு உள்நோக்கத்தோடு அண்ணா, ஜெயலலிதா பற்றி பாஜக விமர்சித்து வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் பற்றியும் பாஜக மாநில தலைமை அவதூறாக விமர்சித்து வருகிறது. அதிமுக பொன்விழா மாநாட்டை சிறுமைப்படுத்தியும் பாஜக மாநில தலைமை பேசியுள்ளது. 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கு விருப்பத்திற்கு உணர்வுகளுக்கு மதிப்பளித்து கூட்டணியை முறிக்கிறோம்." இவ்வாறு முனுசாமி பேசினார்.
மேலும் படிக்க
முதல்வர் கொடுத்த உறுதி! உடல் உறுப்பு தானம் செய்த தேனி நபருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!