Exclusive : ’எனது கையை ’பூச்சி’ என நினைத்து எம்.ஆர்.காந்தி தட்டிவிட்டார்’ பாஜகவின் விபி துரைசாமி புது விளக்கம்..!
தெரியாமல் அவர் தோள் மீது என் கைப்பட்டது உண்மை. அவரு ஏதோ பூச்சி உட்கார்ந்துருக்குன்னு நெனச்சு தட்டிவிட்டாரு. என் கையை தட்டிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் அவர் அப்படி செயல்படவில்லை
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை கண்டித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் அண்ணாமலை வருவதற்கு முன்னதாக மேடையில் பேசத் தொடங்கிய திமுகவில் இருந்து பாஜகவிற்கு சென்ற வி.பி.துரைசாமிக்கு இடையூறாக மைக்கில் வேறோருவர் பேசியதால் அவர் கோபமடைந்தார்.
அண்ணாமலை மேடைக்கு வந்த பிறகு, அவரிடம் அனுமதி பெற்று மீண்டும் பேசத் தொடங்கினார் வி.பி.துரைசாமி. இந்நிலையில், ஆர்பாட்டத்தின்போது பாஜக கன்னியாகுமரி எம்.எல்.ஏ எம்.ஆர் காந்தியின் தோள் மீது விபி துரைசாமி கைப்பட, உடனடியாக அவரது கையை தட்டிவிட்டார் எம்.ஆர்.காந்தி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில், திமுகவில் துணை பொதுச்செயலாளராக இருந்த விபி துரைசாமி தற்போது மரியாதை இல்லாத இடத்தில் போய் சேர்ந்திருக்கிறார் என்றும் விபி துரைசாமி மீது பாஜகவில் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாக திமுகவினர் பலரும் பல்வேறு விதங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.
வந்தமா திமுகாவை குறை சொன்னமானு இருக்கனும், அதை விட்டுட்டு மேலேலா கை வைக்க கூடாது விபி துரைசாமி. இந்த அசிங்கம் தேவையா..😜 pic.twitter.com/eFywZeUr7V
— அணில் (@Anil_Kunju88) March 27, 2022
இது தொடர்பாக விபி துரைசாமியை தொடர்புகொண்டு கேட்டோம் :
கேள்வி : சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உங்களுக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்றும் இதே நிலையில்தான் நீங்கள் பாஜகவில் இருக்கின்றீர்கள் என்றும் சொல்லப்படுவது உண்மையா..?
விபி துரைசாமி : மேடையில் அதுபோன்று நடைபெற்றது உண்மைதான். ஆனால், கட்சியில் எனக்கு உரிய மரியாதை தரப்படுகிறது. மேடை நாகரிகம் தெரியாத சிலரால் அந்த நேரத்தில் அப்படி நேர்ந்துவிட்டது. மற்றபடி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்.
கேள்வி : உங்கள் கை பாஜக எம்.எல்.எ காந்தியின் தோள் மீது பட்டவுடன், உடனடியாக அதனை தட்டிவிட்டது சாதிய பாகுபாடு என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறதே ?
விபி துரைசாமி : சார்.. தெரியாமல் அவர் தோள் மீது என் கைப்பட்டது உண்மை. அவரு ஏதோ பூச்சி உட்கார்ந்துருக்குன்னு நெனச்சு தட்டிவிட்டாரு. என் கையை தட்டிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் அவர் அப்படி செயல்படவில்லை. என் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர் எம்.ஆர்.காந்தி.
சட்டப்பேரவையில் எப்படி பேசவேண்டும் என்று அவருக்கு நான் கிளாஸ் எடுத்து வருகிறேன். இது ஒரு விபத்து. திட்டமிட்டு நடந்தது அல்ல. சோஷியல் மீடியாவுல எழுதுறாங்க சார். தோள் பட்டையில் கைப்பட்டால் திரும்பி பார்ப்பது இல்லையா ? அப்படிதான் நடந்தது.
கேள்வி : ஆனால், உங்கள் கைதான் படுகிறது என்று தெரிந்துதான் காந்தி தட்டிவிடுகிறார். சாதிய பாகுபாடு உங்களிடம் காட்டப்படுகிறது என்று சொல்லப்படுவது உண்மையில்லையா ?
விபி துரைசாமி : இல்லை சார். அப்படி எடுத்துக்கொள்ளமுடியாது. இந்த சோஷியல் மீடியாவுல மட்டும்தான் அப்படி எழுதுறாங்க. என்னால அஜீத் படமே சரியா ஓடலையாம். அவ்ளோதான் சார்.