விருதுநகர் வாக்காளர்கள் கவனத்திற்கு.. படிவங்களை உடனே சமர்ப்பிக்க வேண்டுமா? மாவட்ட முக்கிய அறிவிப்பு!
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவத்தினை இரட்டைப் பிரதிகளில் வழங்கி, மற்றொரு படிவத்தில் உரிய ஒப்புதலைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விருதுநகர் மாவட்டம் வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் – 2026 பணிகள் நடைபெறுவதையொட்டி, வாக்காளர் கணக்கெடுப்புப் படிவங்களை பூர்த்தி செய்து 04.12.2025 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் என்.ஓ.சுகபுத்ரா,வேண்டுகோள்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கான கணக்கெடுப்பு
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கான கணக்கெடுப்புப் படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர்களுக்கு வழங்கும் பணியானது 4.11.2025 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், இதுகுறித்து வானொலி, ஆட்டோக்கள், மின்கல வாகனங்கள், சமூக வலைதளங்கள், நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் வாயிலாக வாக்களர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் இருப்பிடத்திற்கே நேரடியாக வருகை தந்து படிவத்தினை பூர்த்தி செய்ய உரிய வழிகாட்டுதல்கள் வழங்கியும், படிவத்தினை மீளப்பெறும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். இப்படிவத்தினை பூர்த்தி செய்யும் பொழுது வாக்காளர்கள் தங்களது ஆதார் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களும் வழங்குவது கட்டாயமில்லை.
இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் நியமனம் செய்யப்பட்ட அந்தந்த வாக்குச்சாவடி முகவர்களிடம் கணக்கெடுப்புப் படிவத்தின், மற்றொரு படிவத்தில் ஒப்புதல் பெற்று வழங்கலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. பூர்த்தி செய்த கணக்கெடுப்புப் படிவங்களை வருகின்ற 04.12.2025க்குள் வாக்காளர்களிடமிருந்து பெற்று, அதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்குச் சாவடி நிலை அலுவலருக்கான செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் முடிக்கப்பட வேண்டியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 07-சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 16,26,485 வாக்காளர்களில் 15,98,433 (98.28%) வாக்காளர்களுக்கு கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை, 9,78,296 (60.15%) கணக்கெடுப்புப் படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எனவே, நிலுவையில் உள்ள கணக்கெடுப்பு படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பொருட்டு, வாக்காளர்கள் 04.12.2025 வரை காத்திராமல் தாங்கள் பெற்றுக்கொண்ட கணக்கெடுப்புப் படிவங்களைப் பூர்த்தி செய்து, தங்களிடம் வருகை தரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவத்தினை இரட்டைப் பிரதிகளில் வழங்கி, மற்றொரு படிவத்தில் உரிய ஒப்புதலைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.





















