TN Weather Update: 6 மாவட்டங்களில் இன்று வெளுக்கப் போகும் கனமழை; எங்கெங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எங்கெல்லாம் மழை வெளுக்கப் போகிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

மத்திய மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால், தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எங்கெங்கு மழை வெளுக்கப் போகிறது.? பார்க்கலாம்.
வானிலை மைய அறிக்கை கூறுவது என்ன.?
மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று முன்தினம் வலுவடைந்த நிலையில், நேற்று அது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, அதே பகுதியில் நிலவி வருகிறது.
இது ஒடிசாவின் கோபால்பூருக்கு தென்கிழக்கே, 160 கிலோ மீட்டர் தூரத்திலும், ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திற்கு கிழக்கே, 170 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலவி வருகிறது. இந்நிலையில், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில் இன்று இரவு கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8-ம் தேதி வரை மிதமான மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
இதேபோல், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
இதனிடையே, சென்னை, எண்ணூர் காமராஜர், கட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள பயுல் சின்னத்தின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





















