TN Rain : விழுப்புரத்தில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை... 17.2 செ.மீ பதிவு
விழுப்புரத்தில் 17.2 செ.மீ மழை பதிவாகியதால் மழை நீர் தேங்கியதாக ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் : விழுப்புரத்தில் இரண்டு மணி நேரத்தில் கொட்டி தீர்த்த மழையால் புதிய பேருந்து நிலையத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியதையடுத்து மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் பார்வையிட்டு மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார். விழுப்புரத்தில் 17.2 செ.மீ மழை பதிவாகியதால் மழை நீர் தேங்கியதாக ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
புதிய பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீர்
தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் விழுப்புரத்தில் மாலையில் இரண்டு மணி நேரம் பெய்த கனமழையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மழை நீர் குளம்போல் தேங்கியதால் பேருந்து பயணிகளும், ஓட்டுனர்களும் பாதிப்படைந்தனர்.
இதனையடுத்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மழை நீர் தேங்கியதை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது மழை நீரானது பேருந்து நிலையத்திலிருந்து வடியக்கூடிய கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டிருந்ததால் உடனடியாக ஜேசிபி இயந்திரம் மூலம் அடைப்புகள் எடுக்கபட்டு மழை நீரை வெளியேற்றப்பட்டது.
விழுப்புரத்தில் 17.2 செ.மீ மழை
அதனை தொடர்ந்து பேட்டியளித்த ஆட்சியர் பழனி விழுப்புரத்தில் 3 மணி தொடங்கிய மழையானது மாலை 4:40 மணி வரை பெய்த திடீர் கனமழை காரணமாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மழை நீர் சூழ்ந்ததாகவும் இரண்டு மணி நேரத்தில் மட்டும் 17.2 செ.மீ மழை பதிவாகியதாக தெரிவித்தார். மேலும் விழுப்புரத்தில் மற்ற இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை எனவும் புதிய பேருந்து நிலையத்தில் மழை நீரை தேங்குவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். விழுப்புரத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகளில் 320 பணிகளில் 220 பணிகள் நிறைவடைந்துள்ளதால் விரைந்து சேறும் சகதியுமான நகர பகுதி சாலைகள் தார்சாலைகளாக மாற்றப்படுமென தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பதிவான மழை நிலவரம்
விழுப்புரம் : 172 மி.மீ
திண்டிவனம் : 20 மி.மீ
செஞ்சி : 13 மி.மீ
விக்கிரவாண்டி : 52 மி.மீ
விழுப்புரம் மாவட்டத்தின் பதிவான மழை : 20 செ.மீ
4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 21 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுகப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வடதமிழக - தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை 0530 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, 24- ஆம் தேதி காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து, வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 25 - ஆம் தேதி மாலை நிலவக்கூடும்.
தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.