Ex-gratia for Covid-19: கொரோனா இழப்பீடு வழங்குவதில் காலம் தாழ்த்துகிறதா தமிழக அரசு? அமைச்சர் மா.சு பதில்
இனியும் கால தாமதம் செய்தால், இறந்தவர்களின் குடும்பத்தினர் வீதியில் இறங்கி போராடுகின்ற சூழ்நிலை ஏற்படும் - எடப்பாடி பழனிசாமி
கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும், உண்மை நிலை அறியாமல் இதுதொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
முன்னதாக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கொரோனா நிவாரண நிதி வழங்குவதில் அரசு திறமையின்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று குற்றம் சாட்டியிருந்தார். மு.க ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்ற நாள்முதல் ஆடம்பர செலவுகளையும், தேவையில்லாத விளம்பரச் செலவுகளையும் செய்கிறாரே தவிர, அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கோரிய ஒரு கோடி ரூபாயை, கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தருவதை தற்போது யார் தடுக்கிறார்கள்? மாநில அரசுக்கு நிதிப் பாற்றாக்குறை அதிகம் இருக்கிறது என்று சொன்னால், வீண் செலவுகள் செய்யச் சொல்லி யார் வற்புறுத்துகிறார்கள்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாயை வழங்கக்கூட திமுக அரசுக்கு இயலவில்லை என்றால், அரசின் திறமையின்மையை, இந்த அரசின் முதலமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களிடம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும்.
உச்சநீதிமன்ற ஆணைப்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும், நிவாரண நிதியினை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இனியும் கால தாமதம் செய்தால், இறந்தவர்களின் குடும்பத்தினர் வீதியில் இறங்கி போராடுகின்ற சூழ்நிலை ஏற்படும் என்றும் எச்சரித்தார்.
கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்களுக்கு ரூ.50, 000 நிதி உதவி வழங்க அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. மேலும், கொரோனாவால் உயிரிழந்த நபர்களது குடும்பங்களுக்கு நிவாரணம் கோரி வரப்பெறும் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து நிவாரணம் வழங்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டதகவும் தமிழக அரசு தெரிவித்தது. கொரோணா நிவாரணம் கோரி வரப்பெறும் விண்ணங்களை பரிசீலனை செய்து தகுதியுள்ள இனங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தது.
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கும் வகையில், சென்னை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த 10 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 நிவாரண நிதிக்கான காசோலைகளை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கினார். pic.twitter.com/FmHGqj4der
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 8, 2021
ஆனால், இழப்பீட்டு உதவித் தொகை கேட்டு விண்ணப்பம் செய்தவர் தங்களுக்கு இன்னும் நிதியுதவி வரவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.
தமிழக அரசின் இழப்பீட்டு உதவித் தொகைக்கு விண்ணப்பித்த ஒருவர் இதுகுறித்து கூறுகையில், "கொரோனா பெருந்தொற்று காரணமாக என கணவரை இழந்தேன். எனக்கு, வாரிசு என்று யாருமில்லை. ஒரு வாரத்திற்கு முன்பு, tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்தேன். இறப்புச் சான்றிதழ் உட்பட அனைத்து ஆவணங்களும் அளித்தேன். ஆனால், இதுவரை எந்த தகவலும் வரவில்லை. என விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்ற எந்த தகவலும் இல்லை. tn.gov.in இணையதளம் மிகவும் மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்தக் கட்டமாக யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் தெரியவில்லை. சாதாரண மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு அதிக அளவிலான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் " என்று தெரிவித்தார்.