TN Assembly: மசோதாக்களை திருப்பி அனுப்பிய கவர்னர்.. இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்.. நடக்கப்போவது என்ன?
தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று (நவம்பர் 18) நடைபெற உள்ள நிலையில் இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று (நவம்பர் 18) நடைபெற உள்ள நிலையில் இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவி - தமிழ்நாடு அரசு இடையே மோதல்
கடந்த ஓராண்டாகவே தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு இருந்து வருகிறது. மாநில அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் இதுதொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கானது நடைபெற்று வரும் நிலையில் அடுத்தக்கட்ட விசாரணை நவம்பர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்களை மீண்டும் விளக்கம் கேட்டு அரசுக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி வந்தார். இப்படியான நிலையில் ஏற்கனவே தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இது தமிழ்நாடு அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்
இதனைத் தொடர்ந்து உடனடியாக ஆலோசனையில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு, மீண்டும் ஒரு சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி ஆளுநரால் அனுப்பப்பட்ட மசோதாக்களை எல்லாம் நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பலாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பிய 10 மசோதாக்களும் உயர்கல்வித்துறை சம்பந்தப்பட்டது ஆகும். அதில் மருத்துவம், கால்நடை மருத்துவம், வேளாண்மை, மீன்வளப்படிப்பு உள்ளிட்டவையோடு பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை மாநில அரசு மேற்கொள்ளும் வகையிலான சட்ட திருத்த மசோதாவும் அடங்கியுள்ளது.இந்த மசோதாக்களை சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்வார்கள்.
அதன்பின்னர் உறுப்பினர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு ஆட்சேபனை இருந்தால் அதன்மீது விவாதம் நடைபெறும். இதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் பதிலளிப்பார். பின்னர் சட்டப்பேரவை உறுப்பினர்களின் பெரும்பான்மை குரல் வாக்கெடுப்பின் மூலம் அந்தந்த மசோதாக்களை சபாநாயகர் அப்பாவு நிறைவேறியதாக தெரிவிப்பார். சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்படும் மசோதாக்கள் அனைத்தும் இன்று மாலையே மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் இந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிப்பாரா? அல்லது நிலுவையில் வைப்பாரா? என்பது அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.