Thirumavalavan | புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஆதரிக்கமுடியாது - மத்திய அரசுக்கு திருமாவளவன் எம்.பி., கண்டனம்
பா.ஜ.க. அரசின் தகவல் தொழில்நுட்ப புதிய விதிகளை ஜனநாயகத்தை நேசிக்கும் எவராலும் ஆதரிக்க முடியாது என்று திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “பா.ஜ.க. அரசு வகுத்துள்ள தகவல் தொழில்நுட்ப விதிகள் -2021, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தரவுகளை அளிக்குமாறு அரசாங்கம் கோரினால் அவற்றைத் தொடர்புடைய நிறுவனங்கள் உடனடியாக வழங்க வேண்டுமென்றும், அரசாங்கம் சுட்டிக்காட்டுகிற பதிவுகளை 24 மணிநேரத்திற்குள் அகற்ற வேண்டுமென்றும், இவற்றைச் செய்வதற்கு பொறுப்புள்ள அலுவலர்களை நியமிக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது.
இதற்கு ஒப்புக்கொள்ளாத சமூக ஊடக நிறுவனங்களை இந்தியாவில் செயல்பட அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளது. இது தனிமனித கருத்துரிமையைப் பறிக்கும் அடாவடி செயலாகும். அத்துடன், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் நேர் எதிரானதாகும்.
இந்த நிலையில், இந்த விதிகள் பொதுமக்களின் அந்தரங்கத்தைப் பாதிக்கின்றது என்றும், இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்றும் ‘வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இப்போது வழக்கு தொடுத்து இருக்கிறது. சமூக ஊடகங்கள் மூலமாக வன்முறையைத் தூண்டுவது, ஆபாச செய்திகளைப் பரப்புவது, வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட தீய செயல்களைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன என்று மோடி அரசு கூறியிருப்பது வரவேற்கக்கூடியதாகும்.
எனினும், தமது ஆட்சியை விமர்சிப்பவர்களின் குரல்களை ஒடுக்குவதற்காகத்தான் இந்த விதிகளை வரையறுத்துள்ளனர் என்பதே உண்மையாகும். இதனை மோடி அரசின் கடந்த கால நடவடிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன. குறிப்பாக, அண்மையில் டுவிட்டர் நிறுவனத்துக்கு எதிராக பா.ஜ.க. அரசு எடுத்துவரும் அச்சுறுத்தல் நடவடிக்கைகள் இதனை நமக்கு உறுதிப்படுத்துகின்றன.
குடிமக்களின் தனிப்பட்ட தரவுகளை விலைக்கு விற்று, அதன் மூலம் அரசுக்குப் பணம் ஈட்டப் போகிறோம் என்று நாடாளுமன்றத்திலேயே அறிவித்த ஆட்சிதான் பா.ஜ.க. ஆட்சி. குடிமக்களின் அந்தரங்கம் குறித்த உரிமை மீது கொஞ்சமும் மதிப்பே இல்லாத இந்த அரசு, சமூக ஊடகங்கள் குடிமக்களின் தனி மனித உரிமைகளை மீறுகின்றன என்று நீலிக்கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக இருக்கிறது.
இந்தியாவில் சமூக ஊடகங்கள்தான் பெரும்பாலும் குடிமக்கள் தமது கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்த வாய்ப்பளித்து வருகின்றன. சமூக ஊடகங்களில் இலட்சக்கணக்கான போலி கணக்குகளை உருவாக்கியும், அவற்றின் மூலமாகப் பொய் செய்திகளை பரப்பியும், வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டும் வருகின்ற சங்கப் பரிவார அமைப்பினர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததோடு, அவர்களை ஆதரித்தும் வருகிற பாஜக அரசு, வன்முறை பிரச்சாரத்தையும், வெறுப்புப் பிரச்சாரத்தையும் தடுப்பதுதான் எங்கள் நோக்கம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.
சமூக ஊடக நிறுவனங்களை அச்சுறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் ஒட்டுமொத்தமான ஒரு "கண்காணிப்பு சாம்ராஜ்யத்தை’ உருவாக்குவதே அவர்களின் நோக்கம். குடிமக்களைக் கண்காணிப்பதே சர்வாதிகாரிகளின் நடைமுறை. அதைத்தான் பா.ஜ.க. அரசும் செய்ய முயற்சிக்கிறது. மக்களின் அடிப்படை உரிமைகள்மீது நம்பிக்கை கொண்ட, ஜனநாயகத்தை நேசிக்கிற எவரும் இதை ஆதரிக்க முடியாது. எனவே, பா.ஜ.க. அரசின் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுக்க முன்வருமாறு ஜனநாயக சக்திகள் யாவருக்கும் அறைகூவல் விடுக்கிறோம். அத்துடன், பா.ஜ.க. அரசு உடனடியாக சமூக ஊடகங்கள் தொடர்பாக வரையறுத்துள்ள விதிமுறைகளைக் கைவிட வேண்டும். தமது சர்வாதிகாரப் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும்” என்று கூறியுள்ளார்.