Rooms for Drivers: வாகன ஓட்டுநர்களுக்கு விடுதிகளில் தங்குமிடம் - தமிழ்நாடு அரசு உத்தரவு..
பல்வேறு இடங்களுக்கு வாகனங்களில் செல்வோர் தங்கும் இடங்களில் ஓட்டுநர்களுக்கு அறை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல்வேறு இடங்களுக்கு வாகனங்களில் செல்வோர், தங்கும் இடங்களில் ஓட்டுநர்களுக்கு அறை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சரியான தூக்கமின்றி ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்குவதால் விபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறி ஓட்டுநர்களுக்கும் விடுதிகளிலே தங்க அறை ஒதுக்க வேண்டும் என வீட்டுவசதித்துறை செயலாளருக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியிருந்தார்.
Tamil Nadu Government passes order making it mandatory for hotels and lodges to provide accommodation with toilets and bathrooms to the guest's driver(s). pic.twitter.com/UyCUWhopdh
— ANI (@ANI) July 5, 2023
இறையன்புவின் கடிதத்தை தொடர்ந்து தமிழக அரசின் வீட்டுவசதித்துறை சார்பாக ஓட்டுநர்களுக்கு அறை ஒதுக்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணையில், குளியலறை, கழிப்பறை மற்றும் படுக்கை வசதிகளுடன் கூடிய அறையை ஒதுக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அறை விடுதி, விடுதி வளாகம் அல்லது விடுதியிலிருந்து 250 மீட்டர் தொலைவுக்குள்ளாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓட்டுநர்கள் நீண்ட தூரம் வாகனங்களை இயக்கி வரும் காரணத்தால், போதிய தூக்கம் இல்லாமல் மீண்டும் அடுத்த பயணத்திற்கு சோர்வுடன் வாகனங்களை ஓட்டுவார்கள். ஒரு சில ஓட்டுநர்கள் வாகனத்திலேயே படுத்துற்ங்கும் நிலையும் உள்ளது. சரியான தூக்கம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுவதால் கவனக்குறைவு ஏற்பட்டு விபத்துகள் நேரிடும் அபாயம் உள்ளது. இதனை தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு போதுமான ஓய்வு மற்றும் தூக்கம் தேவை என்பதால் தங்கும் விடுதியில் அல்லது அதற்கு 250 மீட்டர் தொலைவில் குளியல் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் ஒரு அறை வழங்கப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து விடுதிகளுக்கும் பொருந்தும்.