டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் அடுத்த ஆட்டம் தொடங்கவுள்ளது. அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் தமிழகம் முழுவதும் நல்ல மழை காத்திருப்பதாக டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் புயலோடு ஆரம்பித்த வடகிழக்கு பருவமழை, நவம்பர் மாதம் சற்று ஓய்ந்திருத்தது. இதனையடுத்து கடந்த நவம்பர் 29 ஆம் தேதி இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல் தமிழகத்தை நோக்கி நகர ஆரம்பித்தது. முதலில் தென் மாவட்டங்களில் மழை கொட்டிய நிலையில், அடுத்து டெல்டா மாவட்டங்களிலும் கன மழை பெய்தது. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை அருகே வலு குறைந்த நிலையில் வந்த டிட்வா, தன்னை வலுப்படுத்திக்கொண்டு தொடர்ந்து 4 நாட்கள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.
மீண்டும் எப்போது மழை
இதனையடுத்து கடந்த 4 நாட்கள் மழை குறைந்திருந்த நிலையில் மீண்டும் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு உருவாகி வருகிறது. இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள பதிவில், அந்தமானை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாகவும், இத்தாழ்வு நிலையுடன் இணைந்த ஈரபதமிகுந்த கீழைக்காற்று இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் பகுதி நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என தெரிவித்துள்ளார். இதனால் 5ம் சுற்று வடகிழக்கு பருவமழை டிசம் 9 முதல் 12 வரை பரவலாக பதிவாகும் என தெரிவித்துள்ளார்
காவிரி டெல்டா மாவட்டங்கள் (டிசம் 9 முதல் டிசம் 12 வரை):
நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் டிசம்பர் 9 முதல் 12 வரையிலாக தேதிகளில் அநேக இடங்களில் மிதமானது முதல் சற்றே கனமழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பதிவாகும் என தெரிவித்துள்ளார். மேலும் மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களின் ஒரிரு கடலோர பகுதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தென் மாவட்டங்கள் (டிசம்பர் 10 அல்லது 11)
தென் கடலோர மாவட்டங்களான புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஆங்காங்கே ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும் ஒரிரு முறை மழை எதிர்ப்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். அடுத்ததாக புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 15ம் தேதி உருவாகி, 5ம் சுற்று வடகிழக்கு பருவமழை டிசம் 16 முதல் 20 வரையிலான காலக்கட்டத்தில் சென்னை உள்பட தமிழகம் முழுதும் தீவிரமாகும் என கூறியுள்ளவர், டிசம்பர் மாதத்தில் உறுதியாக தமிழகத்தில் நல்ல மழை காத்திருக்கிறது என டெல்டா வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.





















