Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump On Netflix Warner Bros: வார்னர் ப்ரோஸ் ஸ்டூடியோவை நெட்ஃப்ளிக்ஸ் வாங்கும் ஒப்பந்தம் பிரச்னையை ஏற்படுத்தலாம் என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

Trump On Netflix Warner Bros: நெட்ஃப்ளிக்ஸ் தளம் ஏற்கனவே மிகப்பெரிய அளவில் சந்தை பங்கை கொண்டுள்ளதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வார்னர் ப்ரோஸ் - நெட்ஃப்ளிக்ஸ் ஒப்பந்தம்:
வார்னர் ப்ரோஸ் ஸ்டூடியோஸ் பேட்மேன் மற்றும் சூப்பர்மேன் உள்ளிட்ட சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை கொண்ட டிசி காமிக்ஸ் போன்ற, பெரும் திரைப்பட உரிமைகளை உள்ளடக்கிய தயாரிப்பு நிறுவனமாகும். அதனை ஒடிடி ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ் 83 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில், 7.48 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இருநிறுவனங்களுக்கான இணைப்பிற்கு 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகலாம் என கூறப்படுகிறது. இதனிடையே, சந்தையில் பெரும்பங்கை ஆக்கிரமித்து இதர நிறுவனங்களை அழிப்பதாக நெட்ஃப்ளிக்ஸ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நெட்ஃப்ளிக்ஸிற்கு எதிராக ட்ரம்ப்:
இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் புகழ்பெற்ற ஹாலிவுட் ஸ்டுடியோவான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சி குறித்து பேசியுள்ளார். அதன்படி, “ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் ஏற்கனவே மிகப் பெரிய சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. இந்த சூழலில் ஸ்டூடியோவையும் வாங்குவது ஒரு பிரச்னையாக இருக்கலாம். இந்த விவகாரத்தில் நானும் ஈடுபடுவேன்" என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஹாலிவுட்டின் உயரடுக்கினரிடையே நம்பிக்கையின்மையையும், கவலைகளையும் எழுப்பியுள்ள கிட்டத்தட்ட $83 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தை, அமெரிக்க அரசின் ஒழுங்குமுறை நடவடிக்கை குழு பரிசீலிக்கும் சூழலில் ட்ரம்ப் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
கட்ட பஞ்சாயத்தில் ட்ரம்ப்:
முன்னதாக வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோ விற்பனைக்கு வருவதாக அறிவிப்பு வெளியானதுமே பல முன்னணி நிறுவனங்களும் அதனை வாங்க முயற்சித்தன. குறிப்பாக ட்ரம்பின் தீவிர ஆதரவாளரும், பாரமவுண்டின் தலைவருமான டேவிட் எலிசனும் அந்த ஸ்டூடியோவை வாங்க முயற்சித்தார். அப்படி நடந்தால் அதனை சுமூகமாக நானே முடித்து கொடுக்கிறேன் என ட்ரம்பும் வெளிப்படையாக பேசியிருந்தார். ஆனாலும், கடும் போட்டிகளுக்கு மத்தியில் சுமார் 25 ஆண்டு வரலாறு மட்டுமே கொண்ட ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ், நூற்றாண்டு கடந்த தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோவை வாங்கும் ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இந்நிலையில் தான் இந்த ஒப்பந்தத்தில் பிரச்னை இருப்பதாக ட்ரம்ப் பேசியுள்ளார்.
ஒப்பந்தத்தின் பலன் என்ன?
தற்போதைய ஒப்பந்தம் நிறைவடைந்தால், நெட்ஃப்ளிக்ஸ், போட்டி ஸ்ட்ரீமிங் தளமான HBO மேக்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோக்களை சொந்தமாக்கிக் கொள்ளும். அதன் மூலம் நெட்ஃப்ளிக்ஸுக்கு ஹாரி பாட்டர் படங்கள், லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் சாகா மற்றும் டிசி ஸ்டுடியோவின் சூப்பர் ஹீரோக்களான பேட்மேன், சூப்பர்மேன் மற்றும் வொண்டர் வுமன் உள்ளிட்ட பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்ட ஒரு பெரிய பட்டியல் கிடைக்கும். அதேநேரம், டிஸ்கவரி மற்றும் சிஎன்என் ஆகிய சேனல்கள் மட்டும் இந்த ஒப்பந்தத்தில் அடங்காது.





















