அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அதிமுகவில் இருந்து இன்னோவா கார் கிடைத்தது, திமுகவில் ஒரு சைக்கிள் கூட கிடைக்கவில்லையென விமர்சித்த நாஞ்சில் சம்பத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார் திமுக நிர்வாகி

நாஞ்சில் சம்பத்- அரசியல் பயணம்
தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு நிர்வாகிகள் பல்டி அடிக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத் திமுக ஆதரவு நிலைப்பாட்டில் கடந்த 6 ஆண்டுகள் இருந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், விஜய் தான் அடுத்த முதல்வர் எனவும், அதிமுகவில் இன்னோவா கார் கொடுத்தார்கள், திமுகவில் ஒரு சைக்கிள் கூட கிடைக்கவில்லையென விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக நிர்வாகியும், தலைமைக்கழக பேச்சாளருமான சாவல்பூண்டி மா.சுந்தரேசன் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில், நாஞ்சில் சம்பத் தொடர்பாக பழைய நினைவுகளை பகிரிந்துள்ளார்.

சாவல்பூண்டி மா.சுந்தரேசன் கடிதம்
அதில், அன்புள்ள நாஞ்சில் சம்பத்...நான் சாவல் பூண்டி சுந்தரேசன், என்னை உனக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.என்னை நீயும் உன்னை நானும் கடந்த 36 ஆண்டுகளாக கிட்டத்தட்ட ஒரு தலைமுறை காலத்திற்கு மேலாகஅறிந்தவர்கள். நீ தி.மு.க.பேச்சாளனாக அறிமுகமான1989 களில் மாநில தலைநகரமான சென்னைக்கு நீ வந்தால் சென்னையில் கட்டண விடுதிகளில் தங்குவதற்கு வசதியும் வாய்ப்புமின்றி நீ சுற்றி சுற்றி வந்த காலத்தில் சென்னை சட்டமன்ற உறுப்பினர் விடுதி (எம்எல்ஏ ஹாஸ்டலில் ) 305 எண் அறையில் நீ தஞ்சம் அடைந்தபோது "நாஞ்சில் சம்பத் நம்முடைய அறையில் தங்கிக் கொள்ளட்டும் அவருக்கு அறையின் இன்னொரு சாவியை கொடு " என்று திருவண்ணாமலை திமுக சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி அவர்கள் சொல்ல நீ அங்கு தங்கி கொள்வதற்காக சட்டமன்ற 305 அறை சாவியை உன்னிடம் கொடுத்தவன் நான்.
ஏறக்குறைய இரண்டு வருட காலம் 305 அறையில் பிச்சாண்டி அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் அறையில் நான் - நீ - என்று தங்கி இருந்தோம் . அந்த காலத்தில் நாம் ஒரே அறையில் தங்கி இருந்தாலும் - உனக்கு கிடைத்த பொதுக்கூட்டங்களுக்கு நீ -போனது போக ஏனைய நேரங்களில் நீ புத்தகங்களே கதியாக இருப்பாய் - நானும் தான்.நான் கு.பிச்சாண்டி அவர்களுடன் அறிவாலயம் கோபாலபுரம் சட்டமன்றம் என்று சென்று விடுவேன். இரவு நேரங்களில் நானும் அவரும்திருவண்ணாமலை நண்பர்களும் இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்கு சென்று வருவோம் நீ அறையில் புத்தகங்களை புரட்டிக் கொண்டிருப்பாய். திமுக மேடைகளில் அன்றைக்கு அற்புதமாக பேசிய உன்னை, தமிழகத்தின் கடைக்கோடியில் கன்னியாகுமரியில் மணக்காவிளை என்கிற ஊரில் மளிகை கடை வைத்திருந்த பாஸ்கரனின் மகனான உன்னை தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்ற கழகமும் கழகத் தோழர்களும் மேடை ஏற்றி திமுக பேச்சாளராக அறிமுகப்படுத்தி உன் வாழ்க்கை வசதிக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர் கருணாநிதி
உன்னுடைய திருமணம் நாகர்கோயிலில் தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில் நடந்த போது நானும் மாண்புமிகு பிச்சாண்டியும் திருமணத்தில் வந்து கலந்து கொண்டோம். நம்முடைய நட்பு நீடித்தது. 1993 -1994ல் அண்ணன் வை கோபாலசாமி தி.மு.கவை விட்டு விலகி ம.தி.மு.க ஆரம்பித்தபோது நீ அவரோடு போனாய். எப்போது அண்ணன் வை.கோபால்சாமி பக்கம் சென்றாயோ அப்போதே உன் மீது இருந்த மதிப்பு மரியாதை எனக்கு போய்விட்டது. நம்முடைய நட்பு நீடிக்க வில்லை விலகி விட்டோம். பரவாயில்லை அங்கு போனாய் . மதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளர் என்ற பொறுப்பை பெற்றாய் போனவன் கொள்கை பரப்பு செயலாளர் ஆனவன் தமிழ்நாட்டில் வேறு எந்த பேச்சாளரும் பேச முடியாத அளவுக்கு உன்னை அறிமுகப்படுத்தியஉன்னை உருவாக்கிய உன்னை வளர்த்த தலைவர் கலைஞரையும் அவர் குடும்பத்தையும் நன்றி இல்லாமல் நாகரிகம் இல்லாமல்மிகக் கேவலமாக பேசினாய்.

உன்னை மேடை ஏற்றி அழகு பார்த்த வசதி வாய்ப்பு ஏற்படுத்திய தி.மு.க வை கழகத்தை கடுமையாக தாக்கி பேசினாய்.நன்றி மறந்தாய்! எதை எதிர்பார்த்து அங்கே போனாயோ எனக்கு தெரியாது! அண்ணன் வைகோபால்சாமி அவர்களிடம் இருந்து விலகினாய். விலகியவன் நீ தாய்க் கழகமாம் தி.மு.க விற்கு வந்திருந்தால் கூட பரவாயில்லை ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் சேர்ந்து கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ஆகி ஜெயலலிதாவிடமிருந்து இன்னோவா காரை பெற்று "இன்னோவா சம்பத் " என்று அன்று முதல்எல்லோராலும் அழைக்கப்பட்டாய்
திமுக மேடைகளில் நாஞ்சில் சம்பத்
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டாய் அங்கேயும் தாக்கு பிடிக்காமல் அரசியலில் இருந்து விலகுவதாக பாசங்கு செய்தாய். திமுகவுக்கு ஆதரவாக மேடையேறி பேசினாய். கடந்த ஆறு ஆண்டு காலமாக தி.மு. காரன் காசில் வயிறுவளர்த்தாய் உயிரை வளர்த்தாய் உன்னுடைய இலக்கியப் பேச்சு உன்னுடைய கொள்கை பேச்சுஎல்லாம் கோமாளி பேச்சாக மாறுகின்ற அளவுக்கு இன்று நடிகர் கட்சியில் போய் சேர்ந்து கொண்டாய் "என் மேனி சிலிர்த்தது, ஆவி துடித்தது, இன்று வசனம் பேசுகிறாய் திமுக காரர்களிடம் இந்த ஆறு ஆண்டுகளாக திமுக மேடைகளில் பேசிப்பேசி லட்ச கணக்கில் சம்பாதித்த நீ அப்பட்டமாக பொய் பேசுகிறாய்.
"தி.மு.க காரர்கள்சைக்கிள் கூட வாங்கி தர மாட்டார்கள்" என்று சொன்ன சொல்லில் இருந்து உன்னை அடையாளப்படுத்தி காட்டினாய். உனக்கு வேறு எந்த தொழிலும் இல்லை நீ பேசிப்பேசியே காசு பார்த்தவன் சம்பாதித்தவன் ... உனக்கே தெரியும். உனக்கு காசு கொடுத்து வளர்த்த திமுகவில் 500க்கும் மேற்பட்ட தலைமை . கழக பேச்சாளர்கள் இருக்கிறார்கள் அவர்களில் 150 பேருக்கு அதிகமாக முன்னணி பேச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்குமே திமுகவில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை . அவர்களும் வாய்ப்பு எதிர்பார்ப்பதில்லை அவர்களில் 20 ,30 பேருக்கு மட்டுமே திமுகவில் கூட்டங்களில் பேச வாய்ப்பு கிடைக்கிறது. மொழிப்போர் தியாகிகள் கூட்டமான வீரவணக்க நாள் கூட்டம், தலைமைக் கழகம். அறிவிக்கும் கூட்டங்களில் மட்டுமே ஏனைய 150 பேச்சாளருக்கும் பேச வாய்ப்பு கிடைக்கும்.

திமுக பேச்சாளர்களின் நிலை
திமுக பெரும்பாலான திமுக பேச்சாளர்கள் திமுக ஆட்சிக்கு வந்த காலத்திலும் சரி எதிர்க்கட்சியாக இருந்த காலத்திலும் சரி கூட்டங்களில் பேசி எதையும் பெரிதாக சம்பாதித்தது இல்லை. திமுகவில் பேசுகின்ற பேச்சாளர்கள் கொள்கைக்காக பேசுகிறவர்கள் அவர்களுக்கு கூட்டங்களுக்கு பேச போகிறபோது
அந்த கூட்டத்தை ஏற்பாடு செய்பவர் செய்து கொடுக்கிற சாதாரண ஓட்டல் அறை அல்லது அந்த ஊரில் இருக்கிற அரசாங்கத்தின் ஓய்வு விடுதிகள் என்று அங்கேயே தங்கி கிடைக்கிற வாய்ப்பு வசதிகளிலும் கொடுக்கிற 4000, 5000 ரூபாயிலேயே திருப்தி அடைந்து தொண்டை கிழிய கழகத்தின் கொள்கைகளை பேசி விட்டு வருவார்கள்.
உன்னைப்போல் 25 ஆயிரம் ரூபாய் 50 ஆயிரம் ரூபாய் ஒரு லட்சம் அன்று என்று வாங்குபவர்கள் அல்ல.நானும் உன்னைப் போல் திமுகவில் பேச்சாளன் தான் உனக்கு முன்பிருந்தே கழக மேடைகளில் பேசி வருபவன். உன்னைப் போன்றவர்களால் திமுக காயப்பட்டு இருக்கிறதே, தவிர காப்பாற்றப்பட்டது இல்லை. எத்தனை கட்சிகள் காத்திருக்கிறதோ? அதையும் பார்ப்போம். தேவைப்பட்டால் மறுபடியும் எழுதுவேன் எப்போதும் போல் உன்னிடம் இருந்து விலகி நிற்கும் சாவல் பூண்டி மா சுந்தரேசன் என அந்த கடிதத்தில் பதிவிட்டுள்ளார்.





















