TN Rain Alert: அடுத்த 2 நாட்களுக்கு கோடை மழை! எந்தெந்த பகுதிகளில்? வெயில் எப்படி இருக்கும்?
அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 23 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
24.04.2024 மற்றும் 25.04.2024: தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
26.04.2024 மற்றும் 27.04.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
இன்று முதல் 25.04.2024 வரை அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களிலும், இதர தமிழக உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் இயல்பை விட 2° – 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.
ஈரப்பதம்:
25.04.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85 % ஆகவும் இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 41.2° செல்சியஸ், வேலூரில் 41.1° செல்சியஸ், திருச்சியில் 41.1° செல்சியஸ், ஈரோடு, மதுரை ஏர்போர்ட்டில் 40.6° செல்சியஸ், திருத்தணியில் 40.2° செல்சியஸ், சேலம் 40.1° செல்சியஸ் மற்றும் திருப்பத்தூரில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36° – 39° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 23° –29° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 37.5° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.6° செல்சியஸ் பதிவாகியுள்ளது.