Thagaisal Thamizhar Award: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு 'தகைசால் விருது’ - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
2023ஆம் ஆண்டுக்கான தகைசால் விருது திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு வழங்கப்படும் என தமிழநாடு அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான தகைசால் விருது திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு வழங்கப்படும் என தமிழநாடு அரசு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்' என்ற பெயரில் புதிய விருது 2021 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு' ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்தவரும், 1962-இல் விடுதலை நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்று தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாக பணி செய்து வருபவரும், உண்மை, பெரியார் பிஞ்சு, The Modern Rationalist - (ஆங்கிலம்) இதழ்களுக்கு ஆசிரியராகவும், இணைய தளங்கள் வாயிலாகவும் மேற்கண்ட கருத்துக்களைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியைத் தொடர்ந்து வருபவரும், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய தமிழரும் திராவிடர் கழகத் தலைவருமான முனைவர், கி. வீரமணிக்கு 2023-ஆம் ஆண்டிற்கான "தகைசால் தமிழர் விருது" வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
”தகைசால் தமிழர்" விருதிற்குத்தேர்ந்தெடுக்கப்பட்டமுனைவர் கி. வீரமணிக்கு , விருதுடன் பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற 2023 ஆகஸ்ட் மாதம் 15-ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் தகைசால் விருது பெற்றவர்கள்
2021ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருது இதற்கு முன்னர் இரண்டு அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது 2021ஆம் ஆண்டு மூத்த அரசியல் தலைவரும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவருமான சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் அதாவது 2022ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தகைசால் என்றால் என்ன?
தகைசால் என்ற சொல்லுக்கு பண்பில் சிறந்தவர் என்று பொருள். இந்த சொல் நான்மணிக்கடிகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நான்மணிக்கடிகை நூலானது ஒரு வைணவ இலக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.