கொரோனா களப்பணியில் கட்டாயப் பணி கூடாது; ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்
கொரோனா களப் பணியாற்றுவதில் ஆசிரியர்களுக்கு கட்டாயப் பணியை தவிர்க்க வேண்டும் என ஆசிரியர் மன்றம் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா களப் பணியாற்றுவதில் ஆசிரியர்களுக்கு கட்டாயப் பணியை தவிர்க்க வேண்டும் என ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் இலா. தியோடர் ராபின்சன் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது,
கொரோனா பணியில்,சில மாவட்டங்களில் ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி கொரோனா பணியில் ஈடுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்தி , அவர்தம் உயிர் பயம் போக்கி ஆவணம் செய்து கனிவுடன் பரிசிலிக்குமாறு கோரிக்கை வேண்டும்.
மேலும், மக்களை கொரோனா பிடியிலிருந்து முற்றிலும் காப்பாற்றிடவும், பாதுகாத்திடவும், பல்வேறுபட்ட விரைவு நடவடிக்கைகளை, தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலில்,
அமைச்சர் பெருமக்களும், அரசின் பல்வேறு துறை அலுவலர் பெருமக்களும், பம்பரம் போல் சுழன்று, தமிழக மக்களை கொரோனா தொற்றின் பிடியிலிருந்து காப்பாற்றிட, முன்னெடுத்துவரும் அனைத்து செயல்பாடுகளையும் போற்றுவதோடு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் அவர்களுக்கு நன்றி பாராட்டுகிறது.
இந்த கொரோனா தீவிர சூழலில், அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் கருத்து ஒவ்வாமையை ஏற்படுத்தி, ஆசிரியர்களை மன உளைச்சலுக்கும் பீதிக்கும் ஆளாக்கும் வகையில், சுயநல சிந்தனையுடன், சமூகசிந்தனையற்ற நிலையில், மற்றவர்களை விட தங்களைப் பெரிதாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலில், சில சமுக ஊடகங்களும், சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சில விஷமிகளும், அரசுக்கும், மக்களுக்கும் பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற குறுகிய மனப்போக்கில் சில கும்பல்களும், கொரோனா களப்பணி சார்ந்து அரசுக்கான ஆலோசனை மற்றும் வேண்டுகோள் என்ற பெயரில், ஆசிரியர்கள் மீது, தங்கள் வன்மத்தை கொப்பளிக்கும் விதமாக, முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
தங்களது அறப்பணியால், தன்னையும் தங்களது குடும்பத்தையும், எழுத்தறிவித்து, சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய செய்வித்து, தங்களை மட்டும், ஒருபோதும் உயர்த்திக் கொள்ளாத ஆசிரியர்கள் மீது புறங்கூறியும் , சமுகத்தில் அவசியமற்றவர்களாக சித்தரித்து, அவர்களை சமுக நலனற்றவர்களாக அடையாளப்படுத்தியும், சிலர் சமுக வலைத்தளங்களிலும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த நிலையில், ஆசிரியர்கள் ஏதோ பணியே செய்யாமல் இருப்பதை போன்று பெரிதுபடுத்தி காட்டுவது மிகுந்த வேதனையளிக்கிறது. இத்தகைய சமுக வலை தள பதிவீட்டாளர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வன்மையாக கண்டிப்பதோடு, அரசின் பல்வேறு வகையான திட்டங்களையும், சமுதாய பணிகளையும் கிராம, நகர, ஊரகப் பகுதிகளில் முழுமையாக கொண்டு சேர்த்து அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுபவர்கள் ஆசிரிய பெருமக்கள் என்பதனை நினைவூட்ட விரும்புகிறது.
மேலும் ஆசிரிய பெருமக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் போன்று, பணி அனுபவமும், கொரோனா முன்களப் பணியாளர்களாக பணியாற்றிய பயிற்சியும் பெற்றவர்கள் அல்ல.
இன்றைய சூழலில் ஆசிரியர்களை கொரோனா களப்பணியில் கட்டாயப்படுத்தி களமிறக்குவது, ஆசிரியர்களுக்கு உயிர் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதோடு , அவர்தம் குடும்பத்தில் பயத்தையும் குழப்பத்தையும் விளைவித்து அவர்தம் வாழ்வில், அசாதாரண சூழ்நிலையினை உருவாக்கிவிடும். ஆகவே பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டது போல், கொரோனா களப்பணியில் ஆசிரியர்களை பணிக்கு கட்டாயப்படுத்தாமல், விரும்புவோர்க்கு வாய்ப்பளித்து, ஆசிரியர்களுக்கு உயிர் பயம் போக்கி, அமைதியையும் பாதுகாப்பையும் உத்திரவாதப்படுத்த ஆவண செய்ய வேண்டுமாறு, தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் வைத்தும், அதனை கனிவுடன் பரிசிலிக்குமாறும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்வதாகவும்.
மேலும் அரசுக்கும், மருத்துவப் பணியாற்றும் முன்களப்பணியாளர்களுக்கும் என்றும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம். என குறிப்பிடப்பட்டிருந்தது.