TN Ministers: "தெரியாது.. தெரியாது.. தெரியாது.." அமைச்சரவை மாற்றம் குறித்து துரைமுருகன் பதில்...!
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக வெளியானது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று நிருபர்களைச் சந்தித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது,
அமைச்சரவை மாற்றமா?
“ தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து முடிவு செய்ய வேண்டியது முதலமைச்சரே ஆவார். எனக்கு அதைப்பற்றி தெரியாது. ஒரு முதலமைச்சருக்கு தன் கீழ் பணியாற்றும் பணியாளர்களை மாற்றலாம். மந்திரிகளை மாற்றலாம். அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால், அப்படி நடக்கிறதா? என்பது உங்களுக்கு எந்தளவு தெரிகிறதோ. அதே அளவுதான் எனக்கும் தெரியும். அமைச்சரவையே மாற்றம் இருக்கா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. இருந்தால்தானே ஆளுநரை சந்திப்பதற்கு?” என்றார்.
அப்போது, அவரிடம் நாளை மறுநாள் பதவியேற்பு விழா இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதே என்று நிருபர்கள் கேட்டதற்கு, பதவியேற்பு விழா இருந்தால் போவோம் என்றார் துரைமுருகன். நான் திருநெல்வேலி, நாகர்கோவில் சென்றுவிட்டு இரண்டு நாட்களுக்கு பிறகு இன்றுதான் சென்னை வந்தேன் என்றார்.
முதலமைச்சர் முடிவு:
பின்னர், நிருபர்கள் தமிழக ஆளுநர் திராவிட மாடல் காலவதியானது என்று கூறியுள்ளாரே? என்று கேட்டதற்கு, ஆளுநரின் பேச்சு எல்லாம் காலாவதி ஆகிவிட்டது. முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் அவருடன் இணைந்து நான் செல்லவில்லை. என்னுடைய அதிகாரிகள் சென்றுள்ளனர். அமைச்சரவை மாற்றம் குறித்து முடிவு செய்ய வேண்டியது முதலமைச்சர் முடிவே ஆகும்.
அமைச்சரவை மாற்றம் என்பது உலக ரகசியம் இல்லை, நான் அவரை பார்க்க வேண்டும் என்றுதான் வேகமாக சென்றேன். ஆனால், அவர் இல்லை. அமைச்சர்கள் யாரும் பதட்டத்தில் இல்லை. எனக்கு தெரிந்தால் வெளிப்படையாக சொல்லிவிடுவேன். கால் வலியாக இருப்பதால் முதலமைச்சர் கோட்டைக்கு வரவில்லை.” இவ்வாறு அவர் கூறினார்.
புதியவர்களுக்கு வாய்ப்பு?
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆடியோ இரண்டு முறை வெளியான பிறகு இந்த தகவல்கள் மிக அழுத்தமாக பேசப்பட்டு வருகிறது. புதிய அமைச்சரவை பட்டியலும் தயார் செய்யப்பட்டு, இன்னும் ஓரிரு தினங்களில் அவர்கள் பதவியேற்க உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. குறிப்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜாவிற்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட உள்ளதாகவும், பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் வேலூர் காந்தி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
மேலும், நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோரது துறைகளும் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: CM Speech :பெண்களை அதிக அளவில் பணியமர்த்தும் நிறுவனங்களை வரவேற்கிறது தமிழ்நாடு- முதலமைச்சர் ஸ்டாலின்
மேலும் படிக்க: Ungalil Oruvan CM Stalin : மாநில சுயாட்சிக்கும் தமிழ்நாடுதான் தலைநகர்... முதலமைச்சர் முக ஸ்டாலினின் 'உங்களில் ஒருவன் பதில்கள்’...