Minister Udhayanidhi Stalin: இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே அதிகாரமளிக்கிறது? : அமித்ஷாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி..
Minister Udhayanidhi Stalin: நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தி, ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியை தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக்கொள்ள வேண்டும் என இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்துள்ள பேட்டியில், ”நாட்டு மக்களை ஒன்றிணைப்பதில் இந்தி மிக முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்திருந்தார். இந்தியா பல ஆண்டுகளாக பல்வேறு மொழிகளின் நாடாக இருந்து வருகிறது. இந்தி எப்போதும் ஜனநாயக மொழியாக இருந்து வருகிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பல்வேறு மொழிகளுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் மொழியாக இந்தி உள்ளது. சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்து இன்று வரை நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழியாக இந்தி உள்ளது” என்று அமித் ஷா கூறியிருந்தார்.
இந்நிலையில், அமித் ஷாவின் இந்த கருத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டங்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், “இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது - பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது" என்று வழக்கம்போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பொழிந்துள்ளார். இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்தக் கருத்து. தமிழ்நாட்டில் தமிழ் - கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது?
நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது. இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்.
#StopHindiImposition” என்று குறிப்பிட்டுள்ளார்.